(கடவுளுடன் ஒரு கட்டிங்: மூன்றாம் பகுதியின் தொடர்ச்சி)
என்னை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இன்னும் தெளிவாக
புரிந்து கொள்ள முடியவில்லை. திடீரென்று ஹன்சிகா மோத்வானி கண் முன்னால் வந்து
செல்கிற மாதிரி தெரிகிறது கொஞ்சம் உற்று பார்த்தால் அது கடவுள் தான்..
“எதற்காக என்னை அப்படி பார்க்கிறாய்” கவனித்து
விட்ட கடவுள் கேட்டார்..
“ஒன்னுமில்ல கடவுளே.. ‘ஜானி வாக்கர்’
வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டான்.. நீங்க வேற
என்னென்னவோ சொல்றீங்க.. எனக்கு கண்ண கட்டி சத்யம் தியேட்டர்ல
விட்ட மாதிரி இருக்கு..”
"யாரது ‘ஜானி வாக்கர்’" அறியாமையில்
கேட்டார் கடவுள்..
“மொங்க மொங்க ஊத்தி குடிக்கிறீங்களே அவன் பேரு தான் ‘ஜானி வாக்கர்’.” முதன் முதலாக சொந்த காசு போட்டு சரக்கு
வாங்கிய கடுப்பை சிறிதாக காட்டினேன்..
அப்போது தான் பாட்டிலை எடுத்து பெயரை பார்த்தார் கடவுள்.
“சரக்கு பேர படிக்காம சரக்கடிக்கிற ஒரு மனுஷன….. ஐயம் ஸோ சாரி… ஒரு கடவுள இப்போ தான் பாக்குறேன்..”
கொஞ்சம் குளறி விட்டாலும் தெளிவாக கூறியதை போல முகத்தை வைத்து கொண்டு
கடவுளை பார்த்தேன்..
“ஒ ஹோ.. நீங்க படிச்சு பார்த்து தான் குடிப்பீங்களா..”
ஒரு ஏளன பார்வையை வீசிக்கொண்டே கேட்டார் கடவுள்.
“யா….. யு ஆர் ரைட்…… மோஸ்ட்லி நாங்க ப்லெண்டெட் ஸ்காட்ச் அதுவும் ஒன்லி ஏய்டீன் இயர்ஸ் ஒல்ட் ஸ்காட்ச்…
யு நோ அதர் வைஸ் வீ டோன்ட் ட்ரிங்க்..” வாய்க்கு
வந்ததை அள்ளி போட்டு கொண்டிருந்தேன் கடவுளிடம்..
“இவ்வளவு நேரம் தமிழில் தானே பேசி கொண்டிருந்தாய்.. இப்போது ஏன் திடீரென்று ஆங்கிலம்…” வினவினார் கடவுள்..
"இது தமிழனின் கண்டுபிடிப்பு…. ரெண்டு ரவுண்டு உள்ள
போனா, கேப்ல கேப்ல ஆங்கிலத்த அடிச்சு விடனும். யு.. நோ..!!
பட்..
கடவுளே.. உங்கள பார்த்தா நாலு ரவுண்டு சாத்திட்டு உக்காந்து
இருக்குற மாதிரி தெரியல.. ஏதோ கல்யான வீட்ல பந்திய காலி பன்னிட்டு
மொய் எழுதாமா வந்த ஆளு மாதிரி தெம்பா உக்காந்து இருக்கீங்களே எப்புடி ???
ஜானி வாக்கர் உங்களுக்கு சேட்டைய காட்டலயா..?? சந்தேக கேள்விகளை அள்ளி வீசினேன்..
“எனது நியுரோ ட்ரான்ஸ்மிட்டர்களை என்னால் கட்டுப் படுத்த முடியும்.
அதனால், இதை எவ்வளவு குடித்தாலும், எனக்கொன்றும் ஆகாது..” சொல்லிவிட்டு ஊத்தி வைத்திருந்த
ஜானியை உள்ளிரக்கினார் கடவுள்.
“எது சொன்னாலும் தெளிவா சொல்லுங்க கடவுளே.. சும்மாவே ஒன்னும் புரியாது இதுல ரெண்டு ரவுண்ட முழுங்கிட்டு கேட்டா சத்தியமா
புரியாது..“ ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கையில்,
அவர் முன்னாடியே தைரியமாக கொட்டாவி விடும் ஒரு மாணவனை போல கூறினேன்..
"உங்கள் மூளை தான் உங்களை எப்போதும் செயல் படுத்தி கொண்டிருக்கிறது. நீங்கள் பார்ப்பது கேட்ப்பது, சுவைப்பது, நுகர்வது என உங்கள் புலன்கள் உள்வாங்குகின்ற அனைத்தும், மின் சமிஞ்சைகளாக (Electric signals) மாற்றப் பட்டு மூளைக்கு அனுப்பப் படுகிறது.
உங்கள் மூளையில், பில்லியன் அளவில் 'நியுரான்' என்ற செல்கள்
உள்ளன, அவை ஒவ்வொன்றும், ஒன்றுடன் ஒன்று இனக்கப்பட்டவைகளாக இருக்கும். அவை மின் வேதியியல் வினை (Electro-chemical reaction)
புரிய வல்லவை.
அதாவது மின் சமிஞ்சைகள் (Electric signals) நியுரான் மீது பாயும் போது அவை வேதி
பொருட்களை (Chemical compunds) சுரக்கின்றன, பல வகையான வேதி பொருட்கள் சுரக்கும், அவைகளுக்கு தான் 'நியுரோ ட்ரான்ஸ்மிட்டர்கள்' எனப் பெயரிடப் பட்டிருக்கிறது.
இந்த வேதி பொருட்கள், உங்கள் உடம்பில் உள்ள அனைத்து
செல்லுக்கும் தகவலை எடுத்து செல்லும் 'போஸ்ட்மேன்' மாதிரி. இந்த வேதி பொருட்களை வாங்கி
கொண்டு அதன் படி செயல் பட செல்லில் 'ரிஸப்டார்கள்' உள்ளன. ஒவ்வொரு நியுரோ
ட்ரான்ஸ்மிட்டருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்.. அதன் படி தான் நீங்கள்
வெளிப்படுகிறீர்கள்.
மதுவில் கலந்திருப்பது எத்தனால் (C2H5-OH) என்ற வஸ்து, அது நீருடன் எளிதில் கரைந்து விடும் தன்மையுடையது. ஒரு
கோப்பை மது உள் சென்றவுடன், அதில் இருக்கும் ‘எத்தனால்’ சிறு குடலினால்
உரிஞ்சப்பட்டு, ரத்ததில் இருக்கும் தண்ணீருடன் கலந்து விடுகிறது. ரத்தம் உடல்
முழுவதும் செல்வதால், உடலில் உள்ள அனைத்து செல்களும் எத்தனால் தங்கிக்கொள்ள இடம்
கொடுக்கிறது.
இது மூளையில் உள்ள நியுரான்களுக்கு செல்லும் போது, வழக்கமாக அங்கே
சுரந்து கொண்டிருக்கும் சில ட்ரான்ஸ்மிட்டர்களை முடக்குகிறது. அது வரை சுரக்காத
வேறு சில ட்ரான்ஸ்மிட்டர்களை ஆக்டிவேட் செய்கிறது. இதனால் இப்போது சிந்தனைகளில்
மாற்றம் ஏற்ப்படும். இது மனிதர்களை பொறுத்து வேறுபடும்,
ரத்தத்தில் கலக்கும்
எத்தனாலின் அளவு ஆதிகம் ஆக மூளையின் செயல் பாடு கொஞ்சமாக குறைகிறது. செல்களில்
எத்தனால் தங்கிக்கொள்ள ஒரளவுக்கு தான் இடம் இருக்கிறது, எல்லையை மீறி மதுவை
உட்செலுத்தினால், C2H5-OH இன் அளவு மிக அதிகமாகி, உடனடியாக மேலோகம் செல்வதற்கு விசா கிடைக்கும்
கிளம்பி விடலாம்..
புரிகிறதா ??"
"என்ன கடவுளே.... கட்டிங்கயும் ஊத்தி குடுத்துட்டு இப்புடி
கரன்ட்டையும் புடுங்கி வுடுரீங்களே... நீங்க நல்லா இருப்பீங்களா " ஒரு ஃப்லோவில் கேட்டு விட்டேன் கடவுளிடம்
"அதானால் தான் உங்கள் உடல், நீங்கள் குடிக்க ஆரம்பித்த
நொடியில் இருந்து, நீங்கள் எடுத்து கொள்ளும் எத்தனாலை வெளியேற்ற நினைக்கிறது,
உங்கள் கிட்னியும் நுரையீரலும் தங்களால் முடிந்த வரை C2H5-OH மாலிக்யுல்களை உருவி,
நீருடனும், நீங்கள் வெளியிடும் சுவாசத்திலும் கலந்து அனுப்புகிறது.
நீங்கள் யார்
பேச்சையும் கேட்க்காமல் ஏதோ ஒரு காதல் தோல்விக்காக, ஒரு ஃபுல்லை ஒரே மடக்கில்
கவிழ்த்தாலும், உங்களை ஆஃப் செய்து தூங்க வைத்து விட்டு நீங்கள் உட்செலுத்திய
மதுவை வாந்தி எடுக்க வைத்து விடும் வல்லமை படைத்தது உடல், காதல் தோல்வியிலும்
வாழத்தான் நினைக்கிறது, அவ்வளவு சீக்கிரத்தில் உங்களை விட்டு விடாது. சொல்லி
விட்டு ஒரு மாதுளை பழத்தை எடுத்து உரிப்புகள் போட ஆரம்பித்தார் கடவுள்..
நான் ஜானி வாக்கரை கையில் எடுத்து மூடியை திறந்து
"இப்போ நான் உங்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கப்போறேன்... நீங்க
ஒரு கடவுள்....
சரக்க பத்தி இவ்ளோ பேசுறீங்க... நீங்க அவ்ளோ பெரிய
அப்பாடக்கர்னா... நான் சொல்றத செஞ்சுக்
காட்டுங்க.".
சொல்லிக் கொண்டே ஒரு கிளாஸில் பாதி ஜானி பாதி தண்ணி ஊத்தி
நன்றாக கலந்து விட்டு, கடவுளிடம் நீட்டி
இப்போ இதுல கலந்து இருக்கிற தண்ணியையும் மதுவையும் மீண்டும்
தனித் தனியாக பிரித்து காட்ட முடியுமா ?? ஒரு மேதாவி மாதிரி கடவுளிடம் கேட்டேன்
"இதை பிரித்தெடுக்க கடவுள் வேண்டாம், உன்னை மாதிரி ஒரு
முட்டாள் போதும். தண்ணீரை விட எத்தனாலுக்கு கொதிநிலை (Boiling point) குறைவு. இந்த கலவையை கொஞ்சம் சூடு படுத்தினால், தண்ணீருடன்
கலந்திருக்கும் எத்தனால் முதலில் வாயுவாக வெளியேரும், தண்ணீர் மீதமிருக்கும். உனக்கு
வேண்டுமென்றால் எத்தனால் வாயுவை குளிர்வித்து திரவமாக்கி குடித்து கொள்ளலாம்." ஒரு
வெளிச்சமான பல்ப்பை குடுத்தார் கடவுள்.
இதை ஏன் கடவுளிடம் கேட்டேன்.... அதற்கும் ஒரு காரணம்
இருக்கிறது
இதை மாதிரி தான் ஒரு முறை, நண்பர்களுடனான ஒரு டாஸ்மாக்
சந்த்திப்பின் போது, சரக்கை பற்றி நான் சொற்பொழிவு ஆற்றி கொண்டிருந்தப்போது, அவை
அனைத்தையும் பக்கத்து டேபிளில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு சக ட்ரங்க்கன்
மங்கி என்னை இடை மறித்து கேட்ட கேள்வியை தான் இப்போது கடவுளிடம் கேட்டேன்..
கடவுளிடம் பதிலை கேட்டு குறித்து வைத்து கொண்டேன்.. அடுத்த
அவனை சந்தித்தால் அவன் சரக்கிலே செய்முறை விளக்கம் குடுத்து விட வேண்டும் என்று தீர்மானித்து கொண்டு கடவுளை
பார்த்தேன்.
கடவுள் பழங்களை விட்டு விளாசி கொண்டிருந்தார். அவர் சாப்பிடுவதை
பார்த்ததும் எனக்கும் பசித்து விட்டது...
"கடவுளே எனக்கு ரொம்ப பசிக்குது.. நான் வெளிய போய் சிக்கன்
ரைஸ் வாங்கிட்டு வாரேன்... ரெண்டு பேரும் சாப்பிடலாம்.." வெளிய கிளம்ப எத்தனித்தேன்..
"அதற்கு தான் இங்கு பழங்கள் குவித்து வைக்க பட்டிருக்கின்றன.." கை நீட்டி பழங்களை காட்டினார் கடவுள்.
"நோ... நோ.. டியர் காட்.. ஐ ஈட் ஒன்லி சோறு வித் கரி...
நீங்க இது வரைக்கும் சொன்னதெல்லாம் பெருசில்ல.. நான் ஒரு மேட்டர்
சொல்றேன் கேளுங்க..
ஒரு மனுஷன் தன் வாழ்க்கைல ரெண்டே ரெண்டு விஷயத்த தான் ரொம்ப அனுபவிச்சு
பன்னுவான்..
ஒன்னு சாப்புட்றது.. இன்னொன்னு தூங்குறது...
யு.... நோ... நான் இது ரெண்ட பத்தி நெறய கவிதைகள் கூட எழுதி
வச்சிருக்கேன்... ஃபார் எக்ஸாம்பில்.. “தேடி சோறு நிதம் தின்று” என்ற தலைப்பில் நான்
எழுதிய ஒரு கவிதய கேளுங்க..
மீன் கரிய மிச்சம் வைக்காம சாப்பிடனும்..
கோழி கரிய கொடூரமா சாப்பிடனும்..
ஆட்டு கரிய ஆட்டய போட்டு சாப்பிடனும்..
மாட்டு கரிய மறச்சு வச்சு சாப்பிடனும்..
எப்புடி இருக்கு இந்த கவித..???. சற்று மிதப்புடன் கேட்டேன் கடவுளிடம்..
"தினமும் பழங்களை சாப்பிட்டு பழகு... முகத்தில் ஒரு பொலிவு
வரும்.." என்னை கவனிக்காமலே கூறினார் கடவுள்.
"ஓ... ஐ லவ் யு ஸோ மச் காட்.. இத நீங்க முதல்லயே சொல்லிருக்கலாம்.
ம்ம்ம்.. இந்த மாதிரி பழங்கள படச்சதுக்கே கடவுளுக்கு தனியா ஒரு படயல் வைக்கனும்..
என்ன நான் சொல்றது..??" ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து கடித்து விட்டு கேட்டேன்.
"இதற்கு நீ நன்றி சொல்லவேண்டியது மரங்களுக்கு தான், இந்த
பழங்கள் இவ்வளவு சுவையாக உருவாக்கப் பட்டதில் ஒரு அடிப்படை காரணம் இருக்கிறது.
இந்த பழம் மிகவும் கசப்பாக இருந்தால் நீ சாப்பிடுவியா??
என்னை நோக்கி கை நீட்டி கேட்டார் கடவுள்..
"காசு குடுத்து திங்க சொன்னா கூட திங்க மாட்டேன்..." தின்று கொண்டே
கூறினேன்.
"அது தான் சூத்திரம்.. உனக்கு சுவையாக ஒரு பழத்தை தயாரித்து
கொடுத்து, அதன் நடுவில் சுவையில்லாத தன் விதையை வைத்து அனுப்புகிறது. அதன் நோக்கம்
தன் இனம் விருத்தியாக வேண்டும். அதற்காக உன்னை மட்டுமல்ல இன்னும் பல உயிரினங்களை உபயோகித்து கொள்கிறது.
ஒரு பூவில் தேன் இருப்பது கூட இதற்காக தான். தேன் சுவையாக இருக்கிறது, தேனை
எடுப்பதற்காக ஒரு வண்டோ அல்லது பூச்சியோ, பூ மீது அமரும் போது, அந்த பூ ஏற்கனவே
தயாரித்து வைத்திருந்து மகரந்த தூள்கள் பூச்சியின் காலில் ஒட்டிக் கொள்கிறது,
அடுத்த மலரிடம் அந்த பூச்சி செல்லும் போது அதன் காலில் ஒட்டியிருக்கும் மகரந்த
தூள் அங்கு விழுந்து விடுகிறது, இது தான் அந்த மலரின் இனப்பெருக்கத்துக்கு தேவை.."
கூறி முடித்தாரா என்று தெரியவில்லை, பேசுவதை நிறுத்தி
விட்டு ஜானி வாக்கரை தேட ஆரம்பித்தார்..
முதன் முறையாக இப்போது கடவுளுக்கு நானே ஒரு ரவுண்ட் ஊத்தி
கொண்டிருக்கிறேன்..
"நான் உங்க கிட்ட ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே ஒரு கேள்வி
கேட்டேன் நீங்க இன்னும் பதில் சொல்லல..
இந்த ப்ரபஞ்சம் இவ்ளோ அழகா இருக்கு... நினைத்ததெல்லாம்
செய்யலாம்.. இயற்கை காட்சிகளை மட்டுமே பார்த்து கொண்டே இருக்கலாம்.. அவ்வளவு அழகு,
இதை போய் ஏன் எல்லாம் மாயை... மாயை என்று கூறுகிறார்கள்” கேள்வியை மறுமொழிந்தேன்..
ஒரு சில நொடிகள் ஆழமாக ஒரு பார்வையை வீசி விட்டு..
"நான் உன்னிடம் ஒரு கற்பனை கதையை கூறுகிறேன். ஆனால் அது உண்மை.
சிறிது கற்பனை செய்து பார்..
ஒரு கால்பந்து அளவில், களி மண்ணில் செய்த உருண்டை (பூமி),
அதன் மேற்பரப்பில் ஒரு எறும்பை விட1.76 லட்சம் கோடி மடங்கு சிறிய அளவில் ஒரு
உயிரினம் நின்று கொண்டிருக்கிறது, அது நீ தான்,
இப்போது அந்த பந்து அசுரவேகத்தில்
சுற்றுகிறது, அந்த பந்து தன்னை தானே சுற்றிக்கொண்டு, அதி வேகத்தில் இன்னொரு பெரிய
பந்தை (சூரியன்) சுற்றுகிறது, அந்த பெரிய பந்து இன்னும் அசுர வேகத்தில், தன்னைத்
தானே சுற்றிக்கொண்டு, தன்னை மாதிரியே சுற்றிக்கொண்டு இருக்கும் கோடான கோடி பெரிய
பந்துகளுடன் (சூரியன் மாதிரியான நட்ச்சத்திரங்கள்) சேர்ந்து ஒரு பெரிய கரும்குழியை (Black hole)
சுற்றுகிறது.
இவை அனைத்தையும் மொத்தமாக சேர்த்து, ஒரு ‘கேலக்ஸி’ என்று நான்
பெயரிடலாம். இதை மாதிரியே பல லட்ச கோடி கேலக்ஸிகள் இருக்கிறது. இதில் எந்த ஒரு
பொருளும் ஒரிடத்தில் நிலையாக இருப்பதில்லை. அனைத்து பொருட்களும் அழிவை நோக்கி
பயனிக்கின்றன. இதில் அதிவேகமாய் நீ அழிந்து போவாய்.
ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்து
பொருட்களும் அணுக்களின் கூட்டமைப்பு தான். நீ உடம்பாக சேகரித்து வைத்திருப்பது,
பூமியில் நீ சேகரித்த அணுக்கள் மட்டுமே, அதை மீண்டும் பூமியே எடுத்து கொள்ளும்.
பூமியும் இல்லாமல் போகும்.
இது அனைத்தையும் ஒரு சேர, ஒரு கணம் அனுபவித்து விட்டால்..
நீயும் இதயே தான் கூறுவாய். அனைத்தும் மாயை... மாயை..”
ஒரு சில நிமிடங்கள் முழுவதும் நிசப்தம். பின் கடவுளே
கலைத்தார்.
நான் உன்னுடன் இருப்பதாக கூறிய ஒரு மணி நேரம் கடந்து மேலும்
ஒரு மணி நேரம் ஆகி விட்டது.. நான் விடை பெறுவதறக்கான நேரம், வந்து விட்டது.. என்னை
பார்த்து கூறினார் கடவுள்.
"இல்லை இல்லை இன்னும் சிறிது நேரம்.. நான் உங்களிடம்
முக்கியமாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியவைகள் சில தான், அதுவும் இனி தான் கேட்க
வேண்டும்.. இன்னும் ரெண்டு ரவுண்டு தான் மீதி இருக்கு.. கொஞ்ச நேரம் இருந்து
விட்டு போங்கள் கடவுளே.. கெஞ்சினேன்.."
(கடைசி கட்டிங் கவிழ்க்கப்படும்....)
ஹூம்.. தெரிந்துகொள்ள வேண்டியவை பல உங்களிடமிருந்து..
ReplyDeleteஇந்த பகுதியை பொருத்த வரையில்,கொஞ்சம் scientifical and technical நெடி தெரிகிறது.. சற்று பின் வாங்கியது போல் ஒரு உணர்வு..
இவ்வளவு சொல்லி மனிதனை நீங்கள் குழப்பினாலும்,தெளிவாக்கினாலும் மனிதன் நீங்கள் சொன்னது போல் போதை தெளிந்ததும் "பழைய குருடி கதவை திறடி" என்ற பழமொழிபோல தான்..
ஒரு சிறு வேண்டுகோள்:
நகைச்சுவையாகவே கொண்டு சென்றீர்கள்,இந்த பகுதியிலும் அந்த நையாண்டியை கொஞ்சம் வேறு விதமாக பயன்படுத்தியிறுக்கலாம் என்று தோன்றுகிறது..
உங்கள் ரசிகனாகிவிட்டேன் நான்..
Good Sense, Make Sense
ReplyDelete