Saturday, 7 April 2012

கடவுளுடன் கடைசி 'கட்டிங்'


(கடந்த நான்கு பகுதிகளையும் படித்து விட்டு இந்த கடைசி பகுதியை படிக்கவும்)

"நீங்க நம்புறீங்களோ இல்லயோ... பட் ஐ பிலீவ் கைஜோஸியம்.. கிளிஜோஸியம்.. வெத்தல ஜோஸியம்.. பாக்கு ஜோஸியம்.. கோடங்கி ஜோஸியம்.. ஏன்னா, இது வரைக்கும் நான் பார்த்த எல்லா ஜோஸியமும் பலிச்சிருச்சு..

யு நோ.. இந்தியா வேர்ல்ட் கப் வாங்கும்னு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு தெரியும்..." பெருமிதமாக கடவுளிடம் கூறினேன் 

"நீ அடுத்த தடவ கை ஜோஸியம் பார்த்தா, கையில் உள்ள ஐந்து விரல்களும் ஏன் வெவ்வேறு நீளத்தில் இருக்கின்றன காலில் ஏன் விரல்கள் உள்ளன என்ற கேள்வியை கேட்டுப்பார்..." கடவுளின் பதில்

"யு ஆர் டூ லேட் கடவுள்ஸ்... போன வருஷம் தான் மாட்டுத்தாவனி பஸ் ஸ்டாண்டுக்கு வெளிய உக்காந்து பீடி அடிச்சுட்டு இருந்த ஒரு நாடி ஜோசியக்காரன் இந்த கேள்விய என் கிட்ட கேட்டான்.. எனக்கு தெரியல, அதனால பதிலயும் அவனே சொன்னான்.."

"என்ன பதில் சொன்னான்.." ஆர்வமாக கேட்டார் கடவுள்.
சிறிது நேரம் யோசித்து விட்டு "அது....ரொம்ப வேகமா சொன்னதால எனக்கு புரியல.. ஆனா இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிக்கும்னு அவன் தான் சொன்னான்.. என்ன காரணம்னு நீங்களே சொல்லிருங்க கடவுளே "

"நீங்கள் குரங்கில் இருந்து பரினாமித்தவர்கள், குரங்குகள் மரங்களின் மீது இலகுவாக தாவி செல்லவும், வேகமாக ஏறி செல்ல வசதியாகவும் தான் கைவிரல்கள் இந்த அமைப்பை அடைந்தது. ஐந்து விரல்களும் ஒரே அளவில் இருந்தால் உங்களால் ஒரு மரக்கிளையை உறுதியாக பிடித்து கொள்ள முடியாது.

உள்ளங்கையை மைக்ரோஸ்கோப் வழியாக பார்த்தால் உங்களுக்கு தெரிய வரும், அது சீரான மேற்பரப்பாக இருக்காது, பெரிய மேடு பள்ளங்கள் மாதிரி இருக்கும், அப்படி இருந்தால் தான் எந்த ஒரு பொருளையும் பிடிக்கும் போது உராய்வு கிடைக்கும். உயிர் வாழ்தலுக்கு இது மிக முக்கியம், இதை தான் ரேகைகள் என்று கூறுகிறீர்கள். அதை பார்த்து எதிர் காலத்தை கூறி கடவுளுக்கே சமாதி கட்டுவது மனிதர்கள் தான்." முழு மூச்சில் இறைத்து முடித்தார் 

"ஆனா வெத்தல ஜோசியம்..." நான் விடுவதாக இல்லை 

"இந்த மாதிரியான சில்லறைத்தனமான கேள்விக்கெல்லாம் எனக்கு விளக்கம் அளிக்க பொறுமையில்லை. உன் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற முழு உரிமை உன்னிடம் மட்டும் தான் உள்ளது. ஆனால், உன்னை ஏமாற்றுவது மிகச் சுலபம். உன் மனதில் மிக எளிதாக ஒரு எண்ணத்தை விதைக்க முடியும்"

"எப்படி??" வினவினேன்..

“சிக்கன் பிரியாணி...” 

ஒரு வார்த்தை மட்டும் கூறிவிட்டு அமைதியாக இருந்தார் 

"ஏற்கனவே பசி வயித்த சாப்புடுது, இதுல நீங்க வேற... 

நீங்க அப்படியே இந்த கட்டிங்க கல்பிக்கிட்டு இருங்க நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாரேன்.." எழுந்துவிட எத்தனித்தேன்

"இப்போது நான் உன்னிடம் ஒரு வார்த்தை தான் கூறினேன்.. ஆனால் அது உனக்கு பல வகையான எண்ணங்களை கிளப்பி விட்டது." கடவுளின் பதில்

"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல... நான் பசில இருந்தேன்.. அதான்.." சமாளித்து விட்டு அமர்ந்தேன்.

"ஐஸ்வர்யா ராய் என்ற நடிகையை பற்றி இப்போது நீ நினைக்க கூடாது என்று கூறினால், உன்னால் முடியாது ஏனென்றால் அவர் பெயரை கேட்ட உடன் உன் மனம் அவரை உருவமாக தான் பார்த்தது. அடிப்படையாகவே மனம் அப்படி தான் இயங்குகிறது. நீ உன்னை ஒரு ஜோசியக்காரனிடம் முழுமையாக ஐந்து நிமிடம் ஒப்படைத்து விட்டால், அவனுக்கு வேண்டிய அளவு உன்னை உப்யோகித்து கொள்வான்... ஒரு ஜோசியக்காரனுடன் இரண்டு நாள் தங்கி பார்த்தால் உனக்கே அனைத்தும் தெரிய வரும்.." 

விளக்கத்தை கொடுத்து விட்டு வெகு நேரத்திற்கு முன்னர் ஊத்தி வைத்திருந்த ஜானியை ஒரே மடக்கில் விளாசிவிட்டு மீதமிருந்த சரக்கையும் ஊத்த சொல்லி செய்கை காட்டினார்..

"இது தான் கடைசி கட்டிங்க.. ஆனா நான் கேக்குற எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டு தான் இத குடிக்கனும்" சொல்லிவிட்டு ஊத்தி வைத்ததை என் அருகில் எடுத்து வைத்து கொண்டேன்.

"ம்ம்ம் கேளு.. ஆனால் விரைவாக.. எனக்கு நேரமில்லை.." அவசரப்படுத்தினார்

"நீங்க எப்படி இந்த பூமிக்கு வந்தீங்க.. உங்கள படச்சது யாரு...உங்கள படச்சவர படச்சது யாரு..அவர படச்சது யாரு;;;;
எல்லாமே அழிஞ்சு போகும்னு சொல்றீங்க.. அப்படினா, நீங்களும் அழிஞ்சு போவீங்களா.. " இது தான் முதல் கேள்வி

"இந்த கேள்விக்கு நான் கடைசியாக பதில் கூறுகிறேன்." பரிட்சை எழுதும் மாணவன் போல் கூறினார் கடவுள்.

"ரைட்டு விடுங்க.. மேட்டர்க்கு வருவோம்.. ஊருக்குள்ள நெறய பேரு காதல் புனிதமானது... காதல் தெய்வீகமானது.. அப்புடின்னு சொல்றாங்க.. நோ ப்ராப்ளம், பட் அத நம்பி ஒரு சில பேர் காதல் தோல்வில தற்கொல பன்றானுங்க, இல்லனா பணத்த கொண்டு போய் டாஸ்மாக்ல கொட்டி அரசாங்கதுக்கு வருமானத்த ஏத்துறாங்க.. அது என்ன காதல்.. அதுக்கு ஒரு அறிவியல் விளக்கம் தர முடியுமா யுவர் ஆனர்.. " அடுத்த கேள்வியை தொடுத்தேன்..

"உன் பார்வையில் காதல் என்றால் என்ன?" கடவுளின் கேள்வி

"வெல்... ஒரு ஹைக்கு சொல்றேன்.கேட்ச் இட்.

காதல் ஒரு தேங்கா எண்ணெய் மாதிரி..
தேச்சுட்டும் குளிக்கலாம்.. குளிச்சிட்டும் தேய்க்கலாம்..

"ரொம்ப கேவலாம இருக்கு.." காரி துப்புகிற மாதிரி கூறினார் கடவுள்.

"இதுக்கே இப்புடி சொல்றீங்களே.. என் டியர் ஃப்ரெண்ட் ஊட்டி வாயன் ஒரு ஹைக்கு சொன்னான் கேளுங்களேன்..

மச்சி.... காதல் என்பது கலைஞர் குடுத்த டீ.வீ மாதிரி
இலவசமா குடுத்தா எல்லாரும் வாங்குவாங்க.. 

இதுக்கு நீ சொன்னதே பரவாயில்ல

காதல் என்பதன் அர்த்தம், அன்பு அக்கறை கலந்து ஒர் உணர்வு எனப்படுவது. ஆனால், காதல் என்பது மனிதர்களுக்கிடையே ஏற்படும பாலியல் ஈர்ப்பு என்பதாகவே பெரும்பாலும் அறியப்படுகிறது. எனவே,
காதலுக்கு அறிவியல் காரணம் ஏற்கனவே கூறப்பட்டு விட்டது. 

டார்வினின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய ‘The origin of species’ என்ற புத்தகத்தில் ‘Natural Selection’ என்ற பகுதியில் வருகின்ற ‘Sexual selection’ என்ற பகுதியை படித்துப் பார்.

"அதெற்கெல்லாம் எனக்கு நேரமில்ல.. நீங்களே அது என்னானு சொன்னீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போவும்.." படித்தால் புரியாது என்பதை வெளிக்காட்டாமல் சமாளித்தேன்.

"உங்களுக்குகான மிக்சிறந்த ஒரு இணையை சந்திக்கும் பொழுதில் உங்கள் மூளையில் ஏற்படும் அதிர்ச்சி அலைகள், பரவசம், சிலிர்ப்பு, போதை அனைத்திற்கும் காரணம் மூளையில் பெருக்கெடுத்து ஓடும் ‘ஹார்மோன்’ என்னப்படும் சில வேதிப்பொருட்கள். 

அவை உங்கள் மூளையின் மற்ற அனைத்து பகுதிகளையும் ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறது. உங்களை, நீங்களே இது வரை பார்த்திடாத ஒரு அதீத அன்பு செலுத்தும் கருவியாக உனர்வீர்கள்.. காதலிக்காக உயிரை கூட விட்டு விடலாம் என்று ஒரு சில நொடி பொழுதுகள் தோன்றி மறையும். காதல் தெய்வீகமானது என்பது உண்மை . ஏனென்றால், அதற்கு ஒரு அடிப்படை காரணம் இருக்கிறது.. அதை தான் டார்வின் புத்தகமாக வடித்திருக்கிறார். 

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.. மழை பெய்து முடித்த இரவுகளில், தவளைகள் கூட்டமாக சேர்ந்து கத்துவதை கேட்டிருக்கிறாயா? வினவினார் கடவுள்.

"யா.. யா.. அந்த பயபுள்ளைங்க தன் ஜோடிகளுக்கு சிக்னல் குடுக்கத் தான உசுர குடுத்து கத்துராய்ங்க.." சந்தேகத்துடன் கூறினேன்

"ஆண் தவளைகள் மட்டுமே அந்த சத்தங்களை எழுப்புகின்றன. ஒரு பெண் தவளையானது, சத்தம் எழுப்பி கொண்டிருக்கும் ஆண் தவளைகளை உன்னிப்பாக கவனிக்கிறது, எந்த தவளை, கடைசி வரை, இடைவிடாமல் முழு ஆற்றலோடு சத்தம் எழுப்புகிறதோ அந்த தவளையை தேடி சென்று இனப்பெருக்கம் செய்கிறது. மற்ற தவளைகள் ஒதுங்கி கொள்கின்றன.."

"என்னக் கொடும கடவுளே இது... நல்ல வேல தவளயா பொறக்கல.. " ஆதங்கத்தை பதிவு செய்து வைத்தேன்

"ஆனால் மனித சமுதாயத்தில் இந்த சிக்கல் இல்லை. ஒரு ஆணை பார்த்த மாத்திரத்தில் அவன் நமக்கு பொருத்தமானவனா என்பது பெண்ணிற்கு தெரிந்துவிடும். இந்த தேர்ந்தெடுத்தல் என்பது மனித சமுதாயதின் வளர்ச்சிக்கேற்ப மாறும். ஆதி கால பெண்கள், வீரத்தின் அடையாளமாக விளங்கும் ஆண்களை விரும்பி தேர்ந்தெடுத்தார்கள். காரணம், அத்தகைய ஆண் தன் குடும்பத்தை ஆபத்துகளில் இருந்து எளிதாக மீட்க கூடியவன். 

ஆனால், அந்த அவசியம் இப்போது இல்லை. காலதிற்கேற்ப ஆண் பெண் உறவிலும் மாறுதல் உண்டாகின்றன.

காதலின் திறவு கோல் பெண்களிடம் தான் கொடுக்கபட்டுள்ளது. தனக்கு விருப்பமான துணையை தேர்ந்தெடுக்கும் நுட்பம் பெண்ணிடம் தான் உள்ளது. இது பல ஆண்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தோற்றுவிக்கப்பட்டது தான் பெண் அடிமைத்தனம். உங்கள் சமூகத்தில் அது தொன்று தொட்டு இருந்து வந்ததால் தான் வளர்ச்சி அடைய வேண்டிய சமூகம் முடங்கி போய் கிடக்கிறது.
 
கடவுள் கூறிமுடிப்பதற்குள் "அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. இப்போ எல்லாம் அவளுக தான் எல்லத்துலயும் டாப்ல வாராளுக, நம்ம பயலுவ எல்லாம் சும்மா வேடிக்க பார்க்க தான் லாய்க்கு." நிதர்சனத்தை விளக்கினேன். 

"நான் சொல்வது அது இல்லை. இயற்கைத் தேர்வு (Natural Selection). இயற்கையின் தேடல் என்ன தெரியுமா?

"தெரிஞ்சா நான் ஏன் நீங்க போடற மொக்கய உக்காந்து கேட்டுகிட்டு இருக்கேன்" மெலிதான கடுப்புடன் கூறினேன்..

"அதை அவ்வளவு எளிதாக விளக்கி விட முடியாது, தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். தலைப்பு சகலகலா ஜீன்ஸ். எழுதி விட்டு உனக்கு அனுப்புகிறேன் படித்து தெரிந்து கொள்.

சரி நான் கிளம்பலாம் அதை எடு.." மறைத்து வைத்திருந்த கட்டிங்கை கை காட்டினார் 

நான் விடுவதாக இல்லை "இன்னும் இரண்டே இரண்டு கேள்விகள் தான் மீதமிருக்கு கடவுளே..

முதல் கேள்வி  

தமிழ் நாட்டுல இது வரைக்கும் வாழ்ந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களில் உங்களுக்கு ரொம்ப புடிச்சது யார்.. ஏன்??

பளிச்சேன்று பதில் வந்தது..

"பெரியார்.."

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். "கடவுளே உங்களுக்கு மேட்டர் தெரியாதா.. அவரு தான் உங்கள வீதி வீதியா மேட போட்டு கழுவி கழுவி ஊத்துனாரு.." 

கடவுளுக்கு என் பதில் தெரிந்திருக்கிறது. என்னை முற்றிலும் எதிர் பார்க்காமல் விளக்கம் குடுக்க ஆரம்பித்தார்..

"சதா கடவுளையே புகழ்ந்து கொண்டே இருப்பதால், தங்களின் மீது கடவுள் தனியாக ஒரு கண் வைத்து பார்த்து கொள்வார் என்று யார் உங்களிடம் கூறியது. மதங்கள், தனி ஒரு மனிதனை நல்லொழுக்க படுத்தவே முயல்கிறது. உங்களுக்கு பொறுமையிருந்தால், இதுவரை இருக்கின்ற அனைத்து மத நூல்களையும் ஒரு வரிசையில் வைத்து விட்டு, ஒன்றன் பின் ஒன்றாக வாசிக்க சொல்லி கேட்டு பாருங்கள். அனைத்தின் சாராம்சமும் ஒன்று தான்.

இதை செய்வதால் ஒரு நன்மை இருக்கிறது. அனைத்து மத நூல்களிலும், சில விஷமிகள், அவர்களின் தேவைக்கேற்ப சில இடைச்சொருகல்கள் செய்திருப்பார்கள் அதை எளிதாக கண்டுபிடித்து விடலாம். முட்டாள்கள் மதங்களை பரப்புகிறார்கள், ஞானிகள் மெய்ப்பொருள் அறிய முயல்கிறார்கள்.

யார் களப்பனி ஆற்றுகிறார்களோ அவர்கள் தான் கடவுளுக்கு விருப்பமானவர்கள். ஜாதி பிரிவு என்பது தான் இது வரை மனிதன் உருவாக்கியதில் சூழ்ச்சிகரமான ஒர் சூன்யம். அதை நம்பி கொண்டிருப்பது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம். அந்த அறியாமையாய் வேறருக்க முயன்றவர் தான் பெரியார். 

"ஆனால் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்கள் தானே அனைத்து துறைகளிலும் முதன்மையாக இருக்கிறார்கள்." கேள்வியை சொருகினேன்.

"ஒன்றை தெரிந்து கொள், நீங்கள் இப்போது ஜாதி ஒழிப்பின் முதல் கட்டத்தில் தான் இருக்கிறீர்கள். இன்னும் பல வருட காலங்கள் கழியும் போது, ஜாதியற்ற சமூகம் மலரும் போது, அனைத்தும் மாறும். பல காலமாக அடிமையாக இருந்த சமூகம் மீண்டு எழ பெரியார் ஒரு விதையாக  இருந்தார். அதனால் தான் அவரை சொன்னேன்.

மேலும், ஜாதியை எதிர்ப்போர் என்ற புது ஜாதியையும் கடவுளை எதிர்ப்போர் என்ற ஒரு புது மதத்தையும் தான் உருவாக்கி இருக்கிறார் பெரியார். எந்த ஒரு விஷயத்தையும் ஏன்.. எதற்கு.. எப்படி என்று கேட்டு பழக சொன்னவர் அவர்." சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு

"சரி, நான் கிளம்புகிற நேரம் வந்து விட்டது.. அதை எடு.." கடைசி கட்டிங்கை கை நீட்டினார்..

கட்டிங்கை அவரிடம் கொடுத்து விட்டு, 

"ஆனால் இன்னும் நீங்க என் முதல் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.."

"நீங்க எப்படி இந்த பூமிக்கு வந்தீங்க.. உங்கள படச்சது யாரு...உங்கள படச்சவர படச்சது யாரு..அவர படச்சது யாரு;;;;
எல்லாமே அழிஞ்சு போகும்னு சொல்றீங்க.. அப்படினா, நீங்களும் அழிஞ்சு போவீங்களா..."

"ஹா ஹா ஹா..." உரக்க சிரித்து விட்டு கடைசி கடிங்கை கவிழ்த்தார்..

எப்போதும் நினைவில் வைத்துக்கொள், இந்த ப்ரபஞ்சத்தின் மிக அரிய படைப்பு உயிர் தான்.. அதை தவிர இந்த ப்ரபஞ்சத்தில் வேறெந்த கடவுளும் கிடையாது.

தனக்கென்று ஒரு உடலை, தானாக அமைத்து, தானாக பரினாமித்த, 'உயிர்' தான் கடவுள். உயிருள்ள அனைத்தும் கடவுள். இதை தவிர வேறு எங்கு கடவுள் இருக்க முடியும்???. வாழ வேண்டும் என்பது மட்டுமே அதன் நோக்கம். ஒரு உயிருக்கு தீங்கு நினைப்பவன் கடவுளை கொலை செய்கிறான். இந்த அறிவு மிருகங்களுக்கு கிடையாது. சில மனிதர்களுக்கும் கிடையாது. நீங்கள் வாழ சில உயிரினங்களை கொல்வது எதனாலென்றால், நீங்கள் பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள். இந்த கொலைகளை செய்யாமல் உயிர் வாழமுடியாது. கடவுள் என்ற வார்த்தை காலப்போக்கில் திரியபட்டு அறியப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். .

சொல்லி விட்டு எழுந்தார்..

"எங்க போறீங்க கடவுளே எங்கிட்ட இன்னும் நிறைய கேள்வி இருக்கு.."

"எனக்கு நேரமில்லை.. நான் கிளம்புகிறேன்.."
.
"அப்போ நீங்க யாரு... இன்னும் சொல்லவேயில்ல.. உங்கள எப்ப மறுபடியும் பாக்குறது,,??"

"நான் மறுபடியும் வருவது குறித்து உன் ஆழ்மனதிடம் தான் கேட்க வேண்டும்.."

"மனிதன் இறந்த பிறகு அவன் உயிர் எங்கே போகிறது கடவுளே..??"

"ஒரு பூனை இறந்த பிறகு அதன் உயிர் எங்கே போகிறதோ அங்கே தான்..."

"சரி எல்லா உயிரும் சேர்ந்து எங்கே போகிறது..??"

"உனக்கு சொன்னாலும் புரியாது அதனால் உன்னிடம் கூற முடியாது."

"அதெல்லாம் புரியும் சொல்லுங்க.."

"உனக்கு தெரிய வேண்டுமென்றால் நீ இறக்க வேண்டும்.. தயாரா...?"
.
"ரைட்டு விடுங்க.. மறுபிறவி உண்டா இல்லயா ??"

"தெரிஞ்சு என்ன செய்ய போற..??"

"தெரிஞ்சு வச்சா நாலு பேர் கிட்ட சொல்லலாம்ல..."

"நீ கேட்கின்ற அனைத்து கேள்விகளுக்கும் உனக்கே விடை தெரிய வரும்... என்னால் எதுவும் கூறமுடியாது"

"சரி... நீங்க யாரு.. எங்க இருக்கீங்க..??"

"இத ஏன் நீ என்னிடம் முதலிலே கேட்கவில்லை.."

"லாஸ்ட்டா கேக்கலாம்னு இருந்தேன்.."

"என்ன ஒரு முட்டாள்தனமான சிந்தனை உனக்கு.. கடவுள் உன்கூட உக்காந்து சரக்கடிப்பாரா..???"

"நீங்க தான அடிசீங்க..."

"என்ன முதல்ல எங்க பார்த்த..??"

"மீன் மார்கெட்ல..."

"அதுக்கு முன்னாடி நீ என்ன பன்னிட்டு இருந்த..??

"நான் மட்டும் வீட்ல தனியா.... இல்ல.,.. நானும் என் ஃப்ரெண்டும்.... இல்ல... ஆமா…. என் ஃப்ரெண்ட் ஊட்டி வாயன் எங்க போனான்..??"

"அவன் வழக்கமா பண்றத தான் பன்னிட்டு இருக்கான்.."

"என்ன பண்றான்..

"பல்லு வெளக்கிடே எதிர் வீட்டு நித்யாவா பார்த்துட்டு இருக்கான்.."

"நீங்க இங்க இருக்கீங்களே...."

"இது திரைக்கதைகளில் உங்க தாத்தா காலத்து டெக்னிக்.. நாம் கூறவிரும்பிய கருத்துகளை வேறொரு கதாபாத்திரத்தின் வழியாக கூறுவது ‘Multi dimensional characterisation’ .ஏற்கனவே நிறைய எழுத்தாளர்கள் இந்த முறையை உபயோகித்து இருக்கிரார்கள்.. எந்திரிச்சு வேலைக்கு கிளம்பு..."

"என்ன கடவுளே பேசுறீங்க எனக்கு ஒன்னுமே புரியல.. மறுபிறவி இருக்கா இல்லயா...சொல்லிட்டு போங்க.."

"செருப்பால அடிப்பேன்.."

கடவுளே... அப்படி திட்டாதீங்க..

"இதுக்கு மேல எந்திரிக்கலனா.. கெட்ட வார்த்த போட்டு கிழிப்பேன்.."

"கடவுளே..."

“எந்திரி டா @#$%^&* **&^^&* எவ்வளவு நேரம் டா உன்ன உசுப்புறது.. ஆல்ரெடீ லாஸ் ஆஃப் பே.. மணி 8 ஆகுது சீக்கிரம் எந்திரிச்சு கெளம்பு” 

"ஊட்டி வாயன்" உரக்க கத்தி கொண்டிருந்தான். 

அப்போது தான் எழுந்தேன்... 

மணி சரியாக காலை 8.

6 comments:

  1. விஞ்ஞானம் கலந்து எழுதியிருக்கும் விதம் அருமை. தொடருங்கள் உங்கள் ப(பா)ணி

    ReplyDelete