Tuesday, 1 May 2012

சுறாக்குருவி - சிறுகதை


"நான் அடிச்சா தாங்க மாட்ட… நாலு மாசம் தூங்க மாட்ட…" குருவியின் மொபைல் ஃபோன் தொடர்ந்து பத்தாவது தடவையாக அலறியது.

"டே.. யாருடா அது கேப்பே விடாம கால் பண்றது.. சைலன்ட்லயாவது போட்டு தொல டா.. ஒரு வேலய கூட ஒழுங்கா பார்க்க முடியல.."

பொங்கலுக்கு வெளியாகும் தன் தலைவரின் படத்தை புகழ்ந்து வசனம் எழுதி கொண்டிருந்த புண்ணியகோடி. உலகத்தின் அதிமுக்கியமான வேலையை செய்து கொண்டிருப்பது போல கூறினான்..

"எங்க வீட்ல இருந்து தான் மச்சான் கால் பன்றாங்க.. மதியம் தான் வருவேன்னு சொல்லிட்டு தான் வந்தேன்.. இப்ப எதாவது மொக்க வேலயா இருக்கும் அதுக்கு தான் கால் பன்னுவாங்க..".

"சரி.. அத சைலன்ட்ல போட்டுட்டு தலைவர புகழ்ந்து எதாவது புதுசா வசனம் யோசி. இன்னைக்குள்ள ஃப்ளெக்ஸ் பேனரு எல்லாம் அடிச்சு முடிக்கனும், போன தடவ மாதிரி லேட் ஆகிட கூடாது மாமா. இப்பவே மணி 10... கட்-அவுட் வேற கட்டனும்.. சீக்கிரம் எதாவது யோசிச்சு சொல்லு.." 

செயற்கை கோளை பறக்க விடும் விஞ்ஞானி  மாதிரி சிந்திக்க தொடங்கினர் இருவரும்.
 
மதியம் மணி 3

வீட்டிற்குள் நுழைந்த குருவி..

"எதுக்குமா அத்தன தடவ கால் பன்ன..?? நான் இன்னைக்கு பிஸினு சொல்லிட்டு தான போனேன்."

"உங்கப்பா பெட்ரோல் காலியாகி நடு வழில நிக்குறாருனு கால் பன்னா தொர ஃபோன எடுக்க மாட்டீங்களோ.. அந்த மனுஷன் ஒரு மணி நேரம் நடயா நடந்து போனாரு டா.., உன்னையெல்லாம் புள்ளயா பெத்து அவருக்கு என்ன பிரயோஜனம்..." வரிந்து கட்டுவது குருவியின் தாய்.
 
"வண்டி எடுக்குறதுக்கு முன்னாடியே அதெல்லாம் பார்க்கணும்." குருவி
 
"உனக்கு தெனமும் செலவுக்கு காசு குடுத்து உன்ன வீட்ல உக்கார வச்சு சோறு போட்டு வளக்குறார்ல..... இதுக்கு மேலயும் பேசுவ நீ... உங்க அண்ணன பாரு டா... படிச்சு முடிச்சு நல்ல வேலைல சேர்ந்து கொழந்த குட்டினு செட்டில் ஆகிட்டான்.... நீ பி.எஸ்ஸி படிச்சு முடிச்சுட்டு வெட்டியா சுத்திக்கிட்டு இருக்க.."

"எனக்கும் கல்யாணம் முடிச்சு வச்சு பாருமா.. நானும் கொழந்த குட்டினு செட்டில் ஆய்டுவேன்.."

"உனக்கு எவன் பொண்ணு கொடுப்பான்..."

"நான் அண்ணன் மாதிரி இளிச்ச வாயன் இல்லமா... அதெல்லாம் நாங்களே ஒரு பொண்ண தேடிக்குவோம்... சரி... ரொம்ப பசிக்குது காலைல இருந்து சாப்பிடல.. போய் சாப்பாடு போடுமா.. நெறய வேல இருக்கு..."

"சாப்பாடு இனிமேதாண்டா பன்னனும்... ஒரு மணி நேரம் பொறு..
ஒரு மணி நேரமா... ஏம்மா உனக்கு அத விட வேற என்னமா வேல இருக்கு.. எனக்கு இப்பவே நேரமாய்டுச்சு நெறய வேல இருக்குமா..."

"ஆமா... பெரிய கலக்டர் வேல. அந்த வெட்டி பசங்க கூட சேர்ந்து தெரு தெருவா போஸ்டர் ஒட்ட தான போற..."

"உனக்கொன்னும் தெரியாது.... விடு, நான் வெளிய சாப்டுக்குறேன்... நான் நேத்தைக்கே கேட்டேன்ல அந்த 1000 ரூவா குடு..."

"எந்த பணத்த நான் வச்சுருக்கேன்.. உங்க அப்பா எனக்கொண்ணும் குடுக்கல உனக்கு கால் பன்னேன் நீயும் எடுக்கல...."

குருவிக்கு கடுங்கோபத்தை கிளப்பி விட்ட வார்த்தைகள் இவை..

"உங்கிட்ட நேத்து எத்தன தடவ சொன்னேன்... ஏம்மா இப்படி இருக்க ஃப்ளெக்ஸ் கட்-அவுட்டு எல்லாத்துக்கும் நான் காசு குடுக்கனும்மா.. இல்லனா மன்றத்துல என்ன மதிக்க மாட்டாங்க..."

முதல் செமெஸ்டரில் ஐந்து பாடங்களிலும் ஃபெயில் ஆகி வாஷ் அவுட் ஆன போது கூட குருவி இவ்வளவு ஆதங்கப் படவில்லை..

"ஆமடா... அவுங்க மத்திக்கலனா நம்ம வீட்ல சோறு பொங்க முடியாது பாரு. உங்க அப்பா எத்தனயோ ஜோஸியக்காரன் ஜாதக்காரனெல்லாம் பார்த்து அழகா குரு விநாயக்னு பேரு வச்சாரு. அந்த பேர இப்புடியாடா மாத்துவ. உன்ன எல்லாரும் குருவி குருவினு கூப்புடுறத கேட்டு உங்கப்பா தெனமும் எவ்வளவு கஷ்ட பட்றாரு தெரியுமா..."

"இதெல்லாம் இப்ப ரொம்ப முக்கியமா. காசு தருவியா மாட்டியா..."

"எங்கிட்ட இல்லடா..."

"அதெல்லாம் நெறய இருக்கும், எடுத்து குடு..."

"உங்க தலைவர் சம்பாதிச்சு நம்ம வீட்டுக்கு தான மணி ஆர்டர் அனுப்புறாரு... ஏண்டா இப்படி தொல்ல பண்ற. எங்கிட்ட இல்லடா..."

"நீ காசு தரலனா இனிமே வீட்டு பக்கமே வரமாட்டேன் மா..."

"போ.. போ.. உங்க தலைவர் உனக்கு தெனமும் சோறு போடுவாரு."

"நான் உங்கிட்ட நெறய தடவ சொல்லிருக்கேன், என்னப் பத்தி எவ்வளவு கேவலமா பேசுனாலும் நான் பொறுத்துக்குவேன், ஆனா எங்க தலைவர பத்தி தப்பா பேசுன கடுப்பாயிடுவேன்..."

"எத்தன தடவ நான் சொல்றது, எங்கிட்ட காசெல்லாம் இல்லடா, கொஞ்ச நேரம் பொறு சாப்பாடு ரெடி பன்றேன் சாப்பிட்டு போ.."

"நீயும் உன் சாப்பாடும்... மனுஷன் சாப்பிடுவான இந்த வீட்ல.. இனி இந்த வீட்டுக்கு வந்தா என்ன என்னடா நாயேன்னு கேளு..."

கோபத்தில் பக்கத்தில் இருந்த ஒரு டேபிளிற்கு எட்டி ஒரு மிதி குடுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினான் குருவி..

மாலை மணி 4

வீட்டில் வீராப்பாக சண்டை போட்டு விட்டதால் பைக்கை எடுக்காமல் நடந்தே தியேட்டர் வரை வந்து விட்டதன் விளைவு அப்போது தான் உச்சி மண்டையில் உரைத்தது குருவிக்கு.. பசி.. பசி.. பசி… என்று வயிறு தன் தேவையை மூளைக்கு அவசர கதியில் அனுப்பி கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது, கொஞ்ச நேரம் பொறுத்து கொள் உனக்கொரு ஃபுல் மீல்ஸ் + இரண்டு ஆம்லேட்டுகள் பரிசாக அளிக்கிறேன் என்று தன் மூளை அதற்கு ஆறுதல் கூறுவதையும் உணரமுடிகிறது.   

தியேட்டர் வாசலில் கட்-அவுட் கட்டி கொண்டிருக்கும் தன் நன்பர்களை பார்த்த விட்ட அந்த நொடி சந்தோஷம்…. இது வரை அவர்கள் ஓசியில் சரக்கு வாங்கி குடுத்த போது கூட இப்படி ஒரு சந்தோஷம் கொப்பளிக்கவில்லை குருவிக்கு..

"மச்சான் குருவி வந்துடான் டா..." தூரத்தில் இருந்தே தன்னை பார்த்து விட்டு காளி கத்தியது கூட மெதுவா தான் கேட்டது..

"மாமா.. உன்ன தாண்டா தேடிக்கிட்டு இருந்தோம்… ஃப்ளெக்ஸ் பேனர் எல்லாம் வாங்க போகனும். எல்லாரும் காசு குடுத்துடாங்க… ஒரு 2000 ரூவா கொறயுது.. நீ ஒரு 1500 ரூவா குடு மாமு மத்தத கடக்காரன்ட்ட பேசியே பூசி மொழுவிடுவோம்..." மன்றத்தலைவர்  புண்ணியகோடி  

"மச்சான்... வீட்ல சண்ட போட்டுட்டு வந்துடேன் டா... பணம் எதுவும் வாங்கல..." பசியை மறைத்து பதில் சொன்னான் குருவி

"டே மச்சான் என்னடா பொறுப்பே இல்லாம பேசுற. இதுல நீ மன்றப் பொருப்பாளர் பதவி வேற கேக்குற...இப்ப எங்கடா போய் பணம் ரெடி பன்றது. இங்க எவங்கிட்டயும் காசில்ல டா, எல்லாத்தையும் ஏற்கனவே தேத்தியாச்சு…. நாளைக்கு தலைவர் படம் ரிலீஸ் ஆகுதுனு தெரியும்ல... உன்ன யார்ரா வீட்ல சண்ட போட சொன்னது..." சிவகாசி பட்டாசாக வெடித்தான் புன்னியக்கொடி.

"மாமு எங்க வீட்ல்யும் தான் ரெண்டு நாளா செம கிழி விழுகுது.. நான் என்ன சண்ட போட்டுட்டா வந்தேன். இடம், பொருள், ஏவல் அறிஞ்சு தான் மாமு சண்ட போடனும்..." இது காளியின் இடைச்சொருகல்.

"இல்ல மச்சான்.. வீட்ல சண்ட போட்டு காலைல இருந்து சாப்புடல டா... செம பசி..."

"நான் கூட தான் காலைல இருந்து சாப்பிடல, தெம்பா வேல செய்யலயா. எவ்ளோ வயசான ஆளு அண்ணா ஹஸாரே ஒரு மாசத்துக்கு மேல சாப்பிடாம இருக்காரு. இதெல்லாம் பழகிடும் மச்சான்..." இயல்பாக கூறினான் காளி

"அதில்ல மச்சான்…. ஒரு நூறு ரூவா இருந்தா…. " குருவி எதோ சொல்ல முயன்ற போதே

"சரி விடு மாமா… எப்படியாவது ரெடி பன்னிடலாம்… முதல்ல போய் பேனர் வாங்கிட்டு வர்றோம்…"

காளி மற்றும் இன்னும் சிலரை தள்ளிக்கொண்டு கிளம்பிய புன்னியக்கொடி சிறிது தூரம் சென்றுவிட்டு திரும்பிப் பார்த்து குருவியிடம்..

"மாமா.. போஸ்டர்ல அடிக்க இன்னும் வசனம் ரெடியாகல… ஏதாவது யோசிச்சுவை."

இது வரை எத்தனயோ தருனங்களில், தான் அழ வேண்டி கண்கள்  விரும்பிய போது கூட பூத்திடாத கண்ணீர் இன்று மெலிதாக தன் முகவரி காட்டியது குருவிக்கு... காரணம், அகோரப்பசியும் அதை அலட்சித்த நண்பர்களும்.. 

எவ்வளவு திட்டினாலும், திட்டு வாங்கினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனக்கு பிடித்தவைகளை மட்டும் தனியாக சமைத்து போடும் தன் தாயின் அன்பு தான் இப்போது குருவியை நிறைத்திருந்தது, கண்கள் இப்போது வெகுவாக கலங்கியது. 

தன்னை சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனித்தான். கேள்விகள் மனதை ஆக்கிரமிக்கிறது..

எதற்காக இப்படி கட்-அவுட், போஸ்டர் எல்லாம்... எதுக்காக நாம் ஒரு நடிகனுக்கு ரசிகனாக இருக்கிறோம்..???

நாம் இப்படி தான் இருக்கவேண்டும் என்று நமது மனதில் ஒரு கற்பனை இருக்கிறது, அதையே ஒருவன் செய்து, நாம் பார்க்கும் போது அவன் நம்மை வெகுவாக கவர்கிறான். ஆனால், இதெல்லாம் வெறும் நடிப்பு தானே. நடிப்பு என்பது அப்படியொன்றும் கடினமான காரியமில்லையே... நாம் இயல்பாகவே பல தருணங்களில் நடிக்க தானே செய்கிறோம்... ஒரு வேளை, யாரோ ஒருவருக்கு நம்மை ரசிகராக அடையாளப்படுத்துவது தான் நம்மை தொடர்ந்து இயக்குகிறதா.

இவ்வளவு பணம் செழவழித்து போஸ்டர், பேனர் எல்லம் செஞ்சு வைக்கிற காசுல, 100 பேருக்கு ஒரு வேளை சாப்பாடு இலவசமா போடலாமே.. எத்தன பேர் இந்த நேரத்துல பசில இருப்பாங்க.. ச்ச்ச.,, எவ்ளோ பெரிய முட்டாள் தனத்த செஞ்சுட்டு இருக்கோம்.. ஒரு வேள நம்மள மாதிரி ஆளுங்களுக்காக தான் முட்டாள்கள் தினம் கொண்டாடுரான்களோ??!! 

“தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” இந்த வரிகளை பாரதி எழுதிய போது கண்டிப்பாக கடும்பசியில் தான் இருந்திருப்பார்.. இல்லையெனில் இப்படி ஒரு ஆத்திரம் அவருக்கு வந்திருக்காது. மகாகவியின் வரிகள் இப்போது தான் புரிந்தது..

இந்த ஒரு நாள் பசி அவனுக்கு ஒரு போதி மரம் போல் ஆனதாகவே உணர்ந்தான்.

அவன் இது வரை வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சில நொடிகளில் மனக்கண்ணில் திரையிட்டு பார்த்தான்..

முக்கியமாக கல்லூரி வாழ்க்கை..

ஒரே செமெஸ்டரில் 24 அரியர் பேப்பர்களை பிட் அடித்து பாஸ் செய்த சாதனைக்காக ஒரு முறை நன்பர்களுக்கு ட்ரீட் குடுத்த போது, ஒரு முறை ஜூனியர்களை ராகிங்க் செய்து ரெண்டு நாள் தொடர்ந்து ட்ரீட் வைக்க வைத்த போதும் கூட "மச்சான் உங்கிட்ட நெறய தெறமைகள் ஒளிஞ்சு கெடக்கு.. நீ கண்டிப்பா பெரிய ஆளா வருவ" என்று கூறிய நண்பர்கள் அனைவரும் இன்று நல்லதொரு வேலை, அழகான வீடு, சுமாரான மனைவி என்று செட்டில் ஆகி விட்டனர். என்னுடனான தொடர்பையும் அத்து விட்டனர்...

இனியும் நான் திருந்தவில்லையென்றால் நான் மனிதனே இல்லை...
நான் மட்டுமல்ல... நண்பர்களும் திருத்த வேண்டும்..

தீர்க்கமான முடிவுடன், தெளிந்த சிந்தனையுடன் வீட்டிற்கு கிளம்ப யோசித்த வேளையில்... காளி தன் பழைய யமஹா க்ரக்ஸில் வந்திறங்கினான்...

"மாமா.... பேனர் ரெடி ஆய்டுச்சு.... இன்னும் ரெண்டு மணி நேரத்துல கட்டி முடிச்சுரலாம்.... இன்னும் போஸ்டர் மட்டும் தான் பாக்கி.... அதையும் நைட்டுக்குள்ள ஒட்டி முடிச்சுரலாம்.. நாளைக்கு வெய்ட்டு காட்டிருவோம்." குதூகலித்தான் காளி.

"எனக்கு உடம்பு சரியில்ல மச்சி... நான் வீட்டுக்கு கிளம்புறேன்..." குருவி

"டே... நீ பசியா இருக்கன்னு சொன்னதால தான் எங்க அப்பா பாக்கெட்ல இருந்து 200 ரூவா அடப்பு போட்டு வந்தேன்,, மச்சான் ஆழ்வார் ஹோட்டலுக்கு போறோம் ஆளுக்கொரு கொத்து சாப்புடுறோம்.."

காளியின் வார்த்தைகள் பீராக பாய்ந்தது குருவியின் காதுகளில்...

ஆழ்வார் ஹோட்டல் சுக்காவும் பரோட்டாவும் எவ்வளவு ருசியானது.. அதுவும் பசியில்.. ஆஹா.. உடல் முழுவதும் உமிழ் நீர் சுரப்பதாக உணர்ந்தான் குருவி.. அது வரை என்ன சிந்தித்தோம் என்பது சிந்தனையில் எழ சிறிதுக்கூட அனுமதிக்கவில்லை பசி.. 

ஆழ்வார் ஹோட்டல்.. மணி ஐந்து..

“பசி ருசியறியாதுன்னு எந்த கேனக்காத்தான் சொன்னது” கொத்து பரோட்டாவை கொத்து கொத்தாக உள்ளே தள்ளிய குருவியின் நினைவலைகள்.. 

"மாமா... புண்ணியகோடி உன் மேல செம கடுப்புல இருக்கான்.. எதாவது பேசி சமாளி.." கை கழுவும் வேளையில் அலாரம் அடித்தான் காளி. 

"விடு மச்சி... நான் பாத்துக்குரேன்.." குருவி.

பைக்கில் இருந்து இறங்கியவுடன் நேராக மன்றத்தலைவர்  புண்ணியகோடியை நோக்கி சென்ற குருவி..

"மச்சான்.. இந்த தடவ கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிகோ.. அடுத்த படத்துக்கு நானே பாதி செலவு பாத்துகுறேன்.." 

"பரவாயில்ல.. விட்றா மாமா பாத்துக்கலாம்.. நீ ஒன்னும் ஃபீல் பன்னிக்காத.. அடுத்த படத்துக்கு இன்னும் ரெண்டு அடி பெரிய கட்- அவுட் வச்சுருவோம்.." புண்ணியகோடி

"இவ்ளோ நேரம் யோசிச்சு கொஞ்சம் வசனம் ரெடியா வச்சுருக்கேன்..

அறம் செய்ய விரும்பு
எங்க தலைவர் வழி திரும்பு

ஆறுவது சினம்
எங்க தலைவர எதிர்த்தா நீ பொணம்

ஃபுல்லா சாப்பிட்டா எடுக்கணும் ரெஸ்ட்டு
இந்தியாவுலையே  நீ தான் தலைவா பெஸ்ட்டு  

திருச்சி பக்கத்துல குளித்தல..
எங்க தலைவர எதிர்த்தவன் தறுதல

மூச்சு விடாமல் கொட்டி தீர்த்தான் குருவி..

"மாமா... வெறித்தனம் டா... கொன்னுட்ட... அப்படியே எல்லாத்தையும் எழுதி குடு... போஸ்டர் அடிக்க குடுதுடுவோம்." பிரகாசமா மின்னினான் புண்ணியகோடி

"ஒரே நிமிஷத்துல எழுதி குடுக்குறேன் மச்சான்... ஒரு சின்ன ரெக்வஸ்ட்... இந்த தடவ போஸ்டர்ல என் பேர சுறாக்குருவி னு போட்டுக்குறேன்..." வெறும் குருவி நல்லா இல்ல மச்சான்..
















11 comments:

  1. பசி வந்தால் பத்தும் பறந்திடும்..
    அதை ஒருவன் தீர்க்க வந்தால்....... கொடுமை!!

    ReplyDelete
  2. செமையா இருக்கு அண்ணன் சார்!!

    ReplyDelete
  3. Thamk u thambi.. word verification..puriyalayae..??

    ReplyDelete
  4. பிளாக்கர் Settings--> Posts and Comments போய், "Show Word Verification" என்கிற Options-ஐ "No" என மாற்றவும்!

    ReplyDelete
  5. வாழ்த்துகள் ...பிரமாதமான பதிவு...

    ReplyDelete
  6. திருந்துன மாதிரியே முடிச்சிருக்கலாம் நண்பா ..!

    ReplyDelete
  7. திருந்தினப்றம் மறுபடியும் ஏன் மாறுனான்?

    ReplyDelete
  8. Unexpected ending,, super ji

    ReplyDelete