Saturday, 17 March 2012

கடவுளுடன் ஒரு கட்டிங்: மூன்றாம் பகுதி


(கடவுளுடன் ஒரு கட்டிங்: இரண்டாம் பகுதியின் தொடர்ச்சி)


"வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளையும் மூடி விட்டு, அனைத்து விளக்குளையும் அணைத்து விட்டு இந்த ரூமிற்குள் வா” என்று கூறிக்கொண்டே எங்கள் வீட்டின் பெட் ரூமிற்குள் நுழைந்தார் கடவுள்.

ஏன் திடீரென்று கடவுள் நித்தியானந்தா மாதிரி பேசுகிறார் என்று குழப்பமாக பார்த்து கொண்டே அவர் கூறியதை நிறைவேற்ற துவங்கினேன்.

கடவுள் பெட் ரூமிறகுள் மெழுகுவர்த்திகளை பற்ற வைத்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. என்னவோ நடப்பது நடக்கட்டும் எது நடந்தாலும் நன்மைக்கே என்று எனக்கு நானே ஆல் இஸ் வெல் சொல்லிக்கொண்டு சரக்கு மற்றும் சை-டிஷ்களோடும் ரூமிற்குள் நுழைந்தேன்,

ஆஹா….!!! வாவ்…!!! என்ன இது..!!! 

என்னால் என் கண்களை நம்பவே முடியவில்ல.!!! ஆச்சர்யமாக ரூமை பார்த்து கொண்டிருந்தேன்.

அந்த ரூமில் மட்டும் மிதமான ஒரு குளிர், மேலே பார்த்தேன் ஆச்சர்யத்தின் உச்ச கட்டம்!!!. 

ரூமின் மேற்கூரையை காணவில்லை, இரவில் இருப்பது போல வானம் கொத்து கொத்தாக நட்சத்திரங்களுடன் மின்னியது. நான் காண்பது நிஜமென்றால், சச்சின் டெண்டுல்கர் மீது சத்தியமாக நான் மூன்று நிலவுகளை பார்க்கிறேன். ஆனால் என் வீட்டின் பெட்ரூம் அப்படியே இருக்கிறது. 

தரையில் நான்கு பெரிய மெழுகுவர்த்திகளை, ஒரு சதுரத்தின் ஒரங்களாக மாற்றி வைத்திருந்தார், நடுவே, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, இன்னும் சில ரகப் பழங்களை குவித்து வைத்திருந்தார், அனைத்தையும் மீறி காதுகளில் மெலிதாக துளைத்து செல்லும் நுண்ணிய மெண் இசை..

அசாதாரணமான காட்சியை கண்ணில் காட்டி விட்ட கடவுளோ ஒரு சாதரணமான டாஸ்மாக் ஆசாமி போல தரையில் உட்க்கார்ந்து இரண்டு கிலாஸ்களில் கட்டிங் ஊத்திக் கொண்டிருந்தார். ஏதும் பேசாமல், ஆச்சர்யத்தின் உச்சத்தில் கடவுளை பார்த்துகொண்டே அவரெதிரில் அமர்ந்தேன்.

இன்னும் நம்ப முடியவில்லை, மேல் நோக்கி ஒரு முறை பார்த்து விட்டு..

“வெளிய பகல் இந்த ரூம்ல மட்டும் இரவு. எப்படி இந்த அதிசயத்த செஞ்சீங்க..!!!! எனக்கும் சொல்லித்தாங்களேன்.” சிறு குழந்தை போல் கேட்டேன் கடவுளிடம்.

“இது, நீ நினைப்பது போல் அதியசம் ஒன்றும் இல்லை. மிகவும் சாதரணமான ஒன்று தான். உனது ரூமில் உள்ள ஒரு ‘புழுத்துளையை’ (Wormhole) பெரிதாக்கி, அதை, இங்கிருந்து 1.5 லட்சம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் வேறொரு கிரகத்தின் ஒரு பகுதியில் இருக்கும் ஒரு 'அண்டவெளி  புழுத்துளையுடன்' (Wormhole) இணைத்து விட்டேன், நீ இப்போது வானில் பார்த்து கொண்டிருப்பது அந்த கிரகத்தை சுற்றி வரும் 9 துணை கோள்களில் மூன்றை தான்.” இயல்பாக கூறினார் கடவுள்.

“செத்து போன எங்க பாட்டி பங்கஜம் மேல சத்தியமா ஒன்னும் புரியல.” தாமதிக்காமல் கூறினேன்.

"அதாவது, இப்போது நமது இருவருக்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளியில் பல லட்சம் அண்டவெளி புழுத்துளைகள் இருக்கலாம். (wormhole) இது வெட்ட வெளியில் இயற்கையாக இருக்கும் ஒரு ஒட்டை.
ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்து தோற்றங்களும் முப்பரிமாணங்கள் உடையவை என்பது உங்களுக்கு கண்கள் வழியாகவே தெரிகிறது..

நீ கையில் வைத்திருக்கும் மொபைல் ஃபோன் முப்பரிமாணமுடையது. அதன் மேற்பரப்பு பளிங்கு போல் மின்னினாலும் அதை நீ ஒரு எலக்ட்ரான் மைக்கரோஸ்கோப் வழியாக பார்த்தால் ஏராளமான குண்டு குழிகளை கண்டறியலாம். காலம் என்பது நான்காவது பரிமாணம், காலத்திலும் நிறைய மேடு பள்ளங்கள், இடைவெளிகள் உண்டு. அதை தான் அறிவியல் கணக்குகள் மூலமாக கண்டறிந்து புழுத்துளைகள் (Wormhole) என்று பெயரிட்டு இருக்கிறார்கள் தற்கால விஞ்ஞானிகள்.

நீ அம்பத்தூரில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு ஒரு துளையை எளிதாக கண்டுபிடிக்கலாம், அதை உபயோகித்து, நீ ஒரே வினாடியில், பல தடவை சென்னையிலுருந்து சிகாகோ சென்று திரும்பி வந்து விடலாம்.

ஆனால் அந்த மாதிரியான ஒரு புழுத்துளையை பெரிதாக்குவதில் நடைமுறையில் பல சிக்கல்கள் உண்டு, இன்னும் மனிதர்கள் யாரும் அதை செய்யவில்லை அதனால் தற்போது இது ஒரு கருதுகோள் சிந்தனை (Hypothetical). ஆனால், எனக்கு அது மிகச் சுலபமானது. இன்னும் விவரமாக தெரிந்து கொள்ள 'Wormhole' என்று விக்கிபீடியாவில் தட்டு, முடிந்தால் புரிந்து கொள்... ”

சொல்லி முடித்து விட்டு, ஊத்தி வைத்திருந்த கட்டிங்கை ஒரே கல்ப்பில் உள்ளே செலுத்தினார்.

இப்போது என் வருத்தம் கடவுள் சியர்ஸ் சொல்லாமல் சரக்கடித்து விட்டார் என்பது தான். இது வரை அவர் பேசியது ஒரு மண்ணும் புரியவில்லை. சரக்கடிக்க கூடாது என செய்திருந்த முடிவை இந்த ரூமிற்குள் நுழைந்த போதே தவிடு பொடியாக்கி அந்த பொடியை ஆம்லேட்டில் தூவி விட்டதால்,நானும் கடவுளை பின்பற்றி, ஒரே கல்ப்பில் உட்செலுத்தி ஊறுகாயை உறுதுனையாக உள்ளே அனுப்பினேன்.

கடவுள் இப்போது ஒரு தங்க ராஜா வடிகட்டி புகையிலையை எடுத்து பற்ற வைத்து புகை விட்டுக்கொண்டே..

“நீ எதற்காக எனக்கு அந்த ஐந்து ரூபாயை குடுத்தாய்..” என்று கேட்டார்

“எனக்கு தெரிஞ்சு கடவுள் நமக்கு ஏதாவது பன்னனும்னா, ஏதாவது கானிக்கை வைக்கனும், உடம்புல அலகு குத்தனும், தீமிதிக்கனும் இல்லனா பழய படத்துல வற்ர மாதிரி பாட்டு பாடி டான்ஸ் ஆடி கடவுள கூப்பிடனும்.இதுல ரொம்ப ஈஸியானது காசு குடுக்குறது தான், அது தப்பு தான் பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது, அதான் குடுத்தேன்..” பெருமிதமாக விளக்கினேன்.

எனது விளக்கம் அவரை கோபப்படுத்தியது போல் ஒரு பார்வை பார்த்தார்.

“இதனால் நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாய்” சிறிது முறைத்து கொண்டே கேட்டார்..

“எனக்கு ஒன்னும் வேணாம் கடவுளே. இந்த உலகத்துல இருக்குற எல்லா உயிரையும் எந்த நோய் நொடியில்லாம பார்த்துகோங்க.. 

அதுல நானும் இருக்கேன் அதனால என்ன கொஞ்சம் ஸ்பெசலா பார்த்துகங்க,, அது போதும்.” என்ற கோரிக்கையை, உலக உயிர்கள் அனைத்திற்கும் என்னை தலைவனாக பாவித்து கொண்டு கடவுள் முன் வைத்தேன். 

கடவுள் என் கோரிக்கையை காதில் வாங்கிய மாதிரி தெரியவில்லை. அடுத்த கட்டிங்கை ஊத்தி கொண்டிருந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இம்முறை அவருக்கு மட்டுமே ஊத்தி விட்டு..

"உன்னிடம் எத்தனை உயிரிகள் உள்ளன?? கேள்வியை கேட்டு விட்டு ஒரு கல்ப்பை உள்ளே தள்ளினார்.

நமக்கு லைட்டா கொசு கடிச்ச மாதிரி தான இருக்கு, கடவுளுக்கு ஏன் குப்புனு மப்பாயிடுச்சு என்று சிந்தனைகளை சிதற விட்டு கொண்டே..

“இதென்ன கேள்வி கடவுளே... என்னிடம் இருப்பது ஒரே ஒரு உயிரி தான்... அது நான் தான்..” சொல்லிவிட்டு நானும் ஒரு கட்டிங்கை ஊத்தி கடவுள் பாணியில் சாத்தினேன்.

“அப்படியா... நான் கணக்கு சொல்கிறேன் எண்ணிக்கொண்டே வா..

உன் இரைப்பையில் 500 வெவ்வேறு விதமான நுண் கிருமிகள் இடைவிடாமல் வேலை செய்து கொண்டிருக்கின்றன, உன் நுரையீரலில் சுமார் 200 வகையான நுண் உயிரிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, உன் வாயில் 150 க்கும் மேற்ப்பட்ட உயிரிகள் உள்ளன, உன் பெருங்குடலில் மட்டும் ஒரு பில்லியன் நுண்ணுயிர்கள், உன்னால் ஜீரனிக்க முடியாதவைகளை கூட, தான் ஜீரனித்து எடுத்து கொள்கிறது. உன் சிறு குடலில் மட்டும் சில ஆயிரம் உயிரிகள், எந்த நேரமும் உங்கள் குடலை துளைத்து, உங்கள் உடம்பின் செல்கள் எடுத்து கொள்ளவேண்டிய புரதங்களை அவை திருடி செல்கின்றன. உன் தோலாக இருப்பது செத்து போன செல்கள், அவைகளை இரையாக உண்பதற்காக என் நேரமும் உன் தோலில் எண்ணற்ற உயிர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. 

உன் உடல் என்பது 10000 ட்ரில்லியன் செல்களால் ஆன கூட்டமைப்பு, ஒவ்வொரு செல்லுக்கும் உயிரிருக்கிறது, அத்தனை உயிர்களால் ஆன கூட்டமைப்பு தான் நீ..” பட படவென கூறி முடித்தார் கடவுள்.

கேக்குறவன் கேனப்பயலா இருந்தா.. பாலா சார் படத்துல பவர் ஸ்டார் ஹீரோ.. கோச்சடையன் படத்துல கோவை சரளா ஹீரோயின்னு சொல்லுவீங்க போல... கட்டிங் தந்த மிதப்பில் கடவுளை கலாய்த்தேன்..

உன்னை மாதிரி பதர்களுக்கெல்லாம் எப்பவும், எது சொன்னாலும் புரியாது. நேரமிருந்தால்  “BBC: Things you need to knowஎன்ற டாக்குமென்ட்ரியை டவுன்லோட் செய்து பார்த்து கொஞ்சமாவது தெரிந்து கொள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே..

“இனி ஜல்சா பன்னுங்கடா குஜாலா ஜில்ல்ப்பா காட்டுங்க டா..” என் மொபைலின் ரிங்க் டோன் உரக்க ஒலித்தது, எடுத்து பார்த்தேன்.. “ஊட்டி வாயன் காலிங்..” என்று காட்டியது. மொக்க போட சிக்கிவிட்டது ஒரு சிறந்த அடிமை என்ற குஜாலில். ஃபோனை அட்டன்ட் செய்து..

“டே மச்சி எங்க இருக்க..” ஒரு வார்த்தை தான் கேட்டேன்..

“செங்கல்பட்டு பக்கம் வந்துட்டு இருக்கேன் மச்சி... இன்னும் ரெண்டு மணி நேரத்துல ரூமுக்கு வந்துருவேன்... ரூம ஒழுங்கா பெருக்கி சுத்தமா வச்சுரு..... இல்லனா ரூமுக்கு வந்ததும் பச்ச பச்சயா கிழிப்பேன்.... இப்பவே சொல்லிட்டேன்....” இரைந்து தள்ளினான்..

அடப்பதரே.. நான் யாருடன் இருக்கிறேன் தெரியுமா.. எங்கிருக்கிறேன் தெரியுமா.. என்று கேட்கலாம், என்று நினைத்த வேலையில் தான் கடவுள் கூறிய இரண்டாவது நிபந்தனை நினைவில் வந்தது,,

“நான் உன்னுடன் இருப்பதாக சொல்லி, ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போட கூடாது”
 
இவனிடம் விஷயத்தை சொல்வதும் ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவதும் ஒன்று தான் என்று முடிவு செய்து விட்டு ஃபோனை கட் செய்து விட்டு, பேட்டரியை உருவி போட்டு விட்டேன்..

இதற்குள் கடவுள் முக்கால்வாசி பாட்டிலை முடித்து விட்டார். மேல் நோக்கி விண்ணில் இருந்த மூன்று நிலவுகளை பார்த்து  ரசித்து கொண்டிருந்தார்..

“இந்த ப்ரபஞ்சம் இவ்ளோ அழகா இருக்கு... நினைத்ததெல்லாம் செய்யலாம்.. இயற்கை காட்சிகளை மட்டுமே பார்த்து கொண்டே இருக்கலாம்.. அவ்வளவு அழகு, இதை போய் ஏன் எல்லாம் மாயை... மாயை என்று கூறுகிறார்கள்” அழுத்தமான பார்வையுடன் கடவுளிடம் வினவினேன்

ஹா ஹா ஹா.. மாயை மாயை.. “ சிறிது உரக்க சிரித்து விட்டு, என்னை நோக்கி..

அந்த பாட்டிலை எடு என்று கூறினார்....

(கட்டிங் ஊத்தப்படும்...)

4 comments:

  1. கடவுள் சொன்னது உங்களுக்குப் புரியவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை

    ReplyDelete
  2. கடவுள் சொல்வது உங்களுக்கு புரியவில்லை, ஆனால் நீங்கள் இங்கே சொல்வதை கடவுள் கூட தெரிந்து வைத்திருக்கமாட்டார் :P :D

    மிக நேர்த்தியாகவும்,நகைச்சுவையோடும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது கடவுளுடனான உங்கள் கட்டிங்..

    ReplyDelete
  3. அறிவியல் கலந்த அற்புதமான நகைச்சுவைப் பதிவு!
    கடவுள் நம்பிக்கை பற்றிய கிண்டலும் உள்ளடங்கியிருக்கிறது.
    படித்து ரசித்தேன்.
    நல்ல அனுபம்.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. very interesting .............super......... thanks.....keep it up....

    ReplyDelete