Monday, 12 March 2012

கடவுளுடன் ஒரு கட்டிங்: இரண்டாம் பகுதி

(கடவுளுடன் ஒரு கட்டிங்: முதல் பகுதியின் தொடர்ச்சி) 

என் கடவுள் கொஞ்சம் வித்தியாசம் ஆனவர், அதிகம் பேசமாட்டார். ஆனால், பேச ஆரம்பித்தால் நிறுத்துவது கொஞ்சம் கடினம் தான். சில நேரங்களில் கடுஞ்சொற்களுடன் கருத்துகளை வெளியிடுவார். இருந்தாலும், அதை யாரும் விமர்சனம் செய்ய முடியாது, ஏனென்றால், அவருடைய ஒரே பக்தனாகிய நான், அதை விட கடுஞ்சொற்களை அசால்ட்டாக உபயோகித்து வருவதால் அவருடைய சொற்கள் யாரையும் புண் படுத்த போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

நானும் எனது கடவுளும், எங்களது வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் வரையில், கடவுளை எப்படி கவர்வது என்ற ஆராய்ச்சி கட்டுரை தான் எனது மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

“இன்னைக்கு ரெண்டு மணி நேரம் கூடுதலா புடுங்கிட்டானுங்க.. படுபாவி பயலுவ.. வெளங்குவானுங்களா”. 

கீழ் வீட்டு பெரிய கிழவி, மெகா சீரியல் பார்க்க முடியாத கடுப்பில் மின்சார வாரியத்தை பிரித்து மேய்ந்து கொண்டிருத்தது.

காலை சாப்பாட்டிற்கு போன கரன்ட் சரியாக மதிய சாப்பாட்டிற்கு வந்திருந்தது.

அப்போது தான் நினைவிற்கு வந்தது, 

“கடைசியாக, ஊட்டி வாயன் ஊருக்கு போகும் போது ரூமை பெருக்கி விட்டு போனான், அவன் போய் ரெண்டு வாரம் ஆச்சு. சுத்தமான இடத்தில் தான் கடவுள் வசிப்பார் என்று படித்திருக்கிறோம்... போச்சுடா கடவுள் கடுப்பாக போறாரு” என்று நினைத்து கொண்டே கதவை திறந்தேன்.

ரூமை ஒரு தடவை சுற்றி பார்த்து விட்ட கடவுள்..

“கரப்பான், எட்டு கால் பூச்சி, எறும்பு போன்ற உயிரிகளுக்கு உங்கள் இருப்பிடம் மிகவும் பிடிக்கும்” என்று கூறினார்

இதை கேட்டவுடன், வெகு நாட்களாக கடவுளை பார்த்தால், கண்டிப்பாக கேட்க வேண்டுமென்று நினைத்திருந்த ஒரு கேள்வியை கேட்டேன்..

“கடவுளே.... நீங்க டைனோசர படச்சது கூட ஏன்னு கேக்க மாட்டேன், ஆனா, இந்த கொசுவ ஏன் படச்சீங்க. கொசுத் தொல்ல தாங்க முடியல கடவுளே.”

நியாயமாக பார்த்தால் இந்த கேள்வியை கொசு தான் என்னிடம் கேட்க வேண்டும். ஒரு டைனோசரை கடிச்சிட்டு கூட அது தப்பிச்சுடும், ஆனா உங்கள கடிச்சா தான் அடி வாங்கி செத்து போகுது. கொசுக்களுக்கு உங்கள் ரத்தம் இரையாக தேவைப்படவில்லை.
 
உங்களை கடிப்பது பெண் கொசுக்கள் மட்டுமே. ஆண் கொசுக்கள் யாரையும் கடிப்பதில்லை. கர்ப்பமாக இருக்கும் பெண் கொசுக்களுக்கு, தங்களது வாரிசுகளை வளர்க்க, புரதம் (protein) கலந்த இரத்தம் தேவை படுகிறது. அதனால், முடிந்த வரை உங்களுக்கு வலிக்காத மாதிரி பார்த்து கொண்டு, உங்கள் இரத்தத்தை உறிஞ்சுகிறது. ஒரு கொசுவினால், தண்ணீரின் மேற்பரப்பில் உள்ள 'பரப்பு இழுவிசையை' (Surface tension) உபயோகித்து தண்ணீரின் மேல் நடந்து செல்ல முடியும், நடனமாட முடியும், உன்னால் முடியுமா..??  ” 
கேள்வியுடன் முடித்தார் கடவுள்.

ஆனால் இதை பற்றி இப்போது பேச வேண்டிய தேவை இல்லை. கடவுளை என் வசம் சாய்த்து விடுவதற்காக நான் ஏற்கனவே சிந்தித்து வைத்திருந்த வழிமுறைகளை கட்டவிழ்த்து விடலாமென்று முடிவு செய்தேன். 

முதலில்..

பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு ஐந்து ரூபாயை எடுத்து கடவுளிடம் நீட்டினேன். “எதற்கு இது” என்கிற மாதிரி என்னை பார்த்தார்.. 

“இதை என்னுடைய காணிக்கையாக வைத்து கொள்ளுங்கள்.. என்னை எந்த நோய் நொடியும் இல்லாமல் கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ளுங்கள்” பய பக்தியுடன் கூறினேன்.

கடவுளின் முகம் இறுக்கமாக மாறியது. அவர் கோபமாக மாறுவதை என்னால் உணர முடிந்தது..

சட்டென்று ஐந்து ரூபாயை பாக்கெட்டில் வைத்து விட்டு, பர்ஸில் இருந்து ஒரு ஐனூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். 

“ஸாரி கடவுளே எங்கிட்ட இவ்ளோ தான் இருக்கு.”

இம்முறை கடவுளின் கண்கள், கேப்டன் விஜயகாந்த் கண்கள் அளவிற்கு சிவந்திருந்தது. என்ன நினைத்தாரென்று தெரியவில்லை. கோபமாக என்னை பார்த்து..

“ஏண்டா வெண்ன... இது என்னடா உனக்கு பழக்கம், கோவிலுக்கு வெளிய இருக்குற பிச்சைகாரனுக்கும் காசு தான் குடுக்குற, உள்ள இருக்குற கடவுளுக்கும் காசு தான் குடுக்குற என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது..” அடிக்கிற மாதிரி கேட்டார் கடவுள்.

இந்த கேள்வியை நான் சிறிது கூட எதிர்ப்பார்க்கவில்லை, அடுத்து என்ன சொல்வதென்று கூட தெரியவில்லை, நாம் செய்த தவறை, கையும் களவுமாக பிடித்து விட்ட ஒரு வாத்தியார் முன் நிற்பது போல் பம்மிக்கொண்டே ஓரக்கண்ணால் கடவுளை நோக்கினேன்..

கடவுளின் பார்வை இப்போது எங்கள் வீட்டின் சமயலறையில் ஒரு ஒரமாய் குவித்து வைக்கப்பட்டிருந்த பாட்டில்களின் மீது பதிந்திருந்தது, அதில் ஒய்யாரமாக வீற்றிருந்த ஒரு நீலக்கலர் பாட்டிலை காட்டி, 

“உடனடியாக சென்று அதை வாங்கி வா” என்று கூறினார்..

“கடவுளே…. சும்மா காமெடி பன்னாதீங்க.. அது என்ன தெரியுமா..??.” சிறிது அதிர்ச்சியுடன் வினவினேன்

“நன்றாக தெரிந்து தான் கேட்கிறேன், உடணே சென்று அதை வாங்கி வா..” கட்டளையிட்டார் கடவுள் 

"என்ன மாதிரியான கடவுள் இவர். கடவுள் தண்ணி அடிப்பாரா..??. அப்படி அடிச்சா அவரு கடவுளா??.." ஒரு நிமிட நேரத்தில் பல சிந்தனைகள் கடந்து சென்றன..

“நீங்க ஒரு கடவுள்... நீங்களே சரக்கடிச்சா எப்படி ?????” அரை மணதுடனே கேட்டேன்..

“ஏன் கூடாது... கடவுள், கல்யானம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் வாழும் போது, நான் தண்ணி அடிக்க கூடாதா??” யதார்த்தமாக வினவினார் கடவுள்.

இதற்கு மேல் கேள்வி கேட்டால், எவருக்குமே புரியாத மாதிரி பதில் சொல்லுவார், 

“புரிந்த மாதிரியும்.... அதே சமயத்தில் புரியாத மாதிரியும் பதில் சொன்னால்.... நீங்கள் தான் கடவுள் # செல்வா...” என்று ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போடலாமா என்று சிந்தித்து கொண்டே ரூமை விட்டு வெளியே வந்து  ‘எலைட்’ டாஸ்மாக் நோக்கி நடந்தேன்.

கடவுள் கை நீட்டி காட்டிய அந்த பாட்டில், நான் குடித்தவரையில், அது தான் விலையுர்ந்த சரக்கு, அதுவும், பாண்டிசேரியில் இருந்து வந்த ஒரு நண்பன் ஓசியில் வாங்கி கொடுத்தது. நமது ரூமிற்கு வருகிற மனிதர்கள் நம்மை பற்றி உயர்வாக கருத வேண்டுமென்று சொல்லி, ஊட்டி வாயன் தான் அதை ஒய்யாரமாக உட்கார வைத்தான். 

ஐந்து ரூபாயில் கடவுளை கவர்ந்து விடலாம் என்று நினைத்தேன், ஏ.டி.எம் கார்டில் ஐந்தாயிரம் எடுக்க வைத்து விட்டான், கடுப்புகள் முழுவதும் இப்போது ஊட்டியின் மேல் திரும்பியது. இருந்தாலும், தற்போது, வேறொரு திட்டம் மனதில் ஓடிக்கொண்டிருப்பதால் அவனை மன்னித்து விடலாம்.

திட்டம் இது தான். 

இது ஒரு அறிய வாய்ப்பு, கடவுளுக்கு இன்று நன்றாக ஊத்தி கொடுத்து சில பல ரகசியங்களை கறந்து விட வேண்டும். முக்கியமாக, கடவுள் எவ்வளவு வற்புறுத்தினாலும் சரி, நாம் குடிக்க கூடாது. திட்டவட்டமான முடிவுகளுடன் வீட்டிற்குள் நுழைந்தேன்...

எங்கள் வீட்டில் இருந்த கலைஞர் டி.வி.யில்.. இசையருவி சேனலை பார்த்து கொண்டிருந்தார் கடவுள்..

“ஆண்டவன பார்க்கனும்.. அவனுக்கும் ஊத்தனும்... அப்புறமா கேள்வி கேட்கனும்... என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது...”

(இனி வருவது... கடவுளின் சர வெடி கருத்துகள்.. தொடரும்.....)

3 comments:

  1. ஆண்டவன பார்க்கனும்.. அவனுக்கும் ஊத்தனும்... அப்புறமா கேள்வி கேட்கனும்...MMM waiting.....

    ReplyDelete
  2. இம்முறை கடவுளின் கண்கள், கேப்டன் விஜயகாந்த் கண்கள் அளவிற்கு சிவந்திருந்தது

    ReplyDelete
  3. அருமையான உரையாடல். கடவுள் பேசுவதில் சில வார்த்தைகளை மாற்றியிருக்கலாம். உரையாடல் சுவைபட போய்க் கொண்டிருக்கிறதே! அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete