Monday, 26 March 2012

கடவுளுடன் ஒரு கட்டிங் : நான்காம் பகுதி



(கடவுளுடன் ஒரு கட்டிங்: மூன்றாம் பகுதியின் தொடர்ச்சி)

ன்னை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை. திடீரென்று ஹன்சிகா மோத்வானி கண் முன்னால் வந்து செல்கிற மாதிரி தெரிகிறது கொஞ்சம் உற்று பார்த்தால் அது கடவுள் தான்.. 

எதற்காக என்னை அப்படி பார்க்கிறாய்கவனித்து விட்ட கடவுள் கேட்டார்..

ஒன்னுமில்ல கடவுளே.. ‘ஜானி வாக்கர்’ வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டான்.. நீங்க வேற என்னென்னவோ சொல்றீங்க.. எனக்கு கண்ண கட்டி சத்யம் தியேட்டர்ல விட்ட மாதிரி இருக்கு..” 

"யாரது ‘ஜானி வாக்கர்’" அறியாமையில் கேட்டார் கடவுள்..

மொங்க மொங்க ஊத்தி குடிக்கிறீங்களே அவன் பேரு தான் ‘ஜானி வாக்கர்’.” முதன் முதலாக சொந்த காசு போட்டு சரக்கு வாங்கிய கடுப்பை சிறிதாக காட்டினேன்..

அப்போது தான் பாட்டிலை எடுத்து பெயரை பார்த்தார் கடவுள்.

சரக்கு பேர படிக்காம சரக்கடிக்கிற ஒரு மனுஷன….. ஐயம் ஸோ சாரிஒரு கடவுள இப்போ தான் பாக்குறேன்..” கொஞ்சம் குளறி விட்டாலும் தெளிவாக கூறியதை போல முகத்தை வைத்து கொண்டு கடவுளை பார்த்தேன்..

ஒ ஹோ.. நீங்க படிச்சு பார்த்து தான் குடிப்பீங்களா..” ஒரு ஏளன பார்வையை வீசிக்கொண்டே கேட்டார் கடவுள்.

யா….. யு ஆர் ரைட்…… மோஸ்ட்லி நாங்க ப்லெண்டெட் ஸ்காட்ச் அதுவும் ஒன்லி ஏய்டீன் இயர்ஸ் ஒல்ட் ஸ்காட்ச்யு நோ அதர் வைஸ் வீ டோன்ட் ட்ரிங்க்..” வாய்க்கு வந்ததை அள்ளி போட்டு கொண்டிருந்தேன் கடவுளிடம்..

இவ்வளவு நேரம் தமிழில் தானே பேசி கொண்டிருந்தாய்.. இப்போது ஏன் திடீரென்று ஆங்கிலம்…” வினவினார் கடவுள்..

"இது தமிழனின் கண்டுபிடிப்பு…. ரெண்டு ரவுண்டு உள்ள போனா, கேப்ல கேப்ல ஆங்கிலத்த அடிச்சு விடனும்யு.. நோ..!! பட்..

கடவுளே.. உங்கள பார்த்தா நாலு ரவுண்டு சாத்திட்டு உக்காந்து இருக்குற மாதிரி தெரியல.. ஏதோ கல்யான வீட்ல பந்திய காலி பன்னிட்டு மொய் எழுதாமா வந்த ஆளு மாதிரி தெம்பா உக்காந்து இருக்கீங்களே எப்புடி ???

ஜானி வாக்கர் உங்களுக்கு சேட்டைய காட்டலயா..??  சந்தேக கேள்விகளை அள்ளி வீசினேன்..

எனது நியுரோ ட்ரான்ஸ்மிட்டர்களை என்னால் கட்டுப் படுத்த முடியும். அதனால், இதை எவ்வளவு குடித்தாலும், எனக்கொன்றும் ஆகாது..” சொல்லிவிட்டு ஊத்தி வைத்திருந்த ஜானியை உள்ளிரக்கினார் கடவுள்.

எது சொன்னாலும் தெளிவா சொல்லுங்க கடவுளே.. சும்மாவே ஒன்னும் புரியாது இதுல ரெண்டு ரவுண்ட முழுங்கிட்டு கேட்டா சத்தியமா புரியாது..“ ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கையில், அவர் முன்னாடியே தைரியமாக கொட்டாவி விடும் ஒரு மாணவனை போல கூறினேன்..


"உங்கள் மூளை தான் உங்களை எப்போதும் செயல் படுத்தி கொண்டிருக்கிறது. நீங்கள் பார்ப்பது கேட்ப்பது, சுவைப்பது, நுகர்வது என உங்கள் புலன்கள் உள்வாங்குகின்ற அனைத்தும், மின் சமிஞ்சைகளாக (Electric signals) மாற்றப் பட்டு மூளைக்கு அனுப்பப் படுகிறது. 

உங்கள் மூளையில், பில்லியன் அளவில் 'நியுரான்' என்ற செல்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும், ஒன்றுடன் ஒன்று இனக்கப்பட்டவைகளாக இருக்கும். அவை மின் வேதியியல் வினை (Electro-chemical reaction) புரிய வல்லவை.

அதாவது மின் சமிஞ்சைகள் (Electric signals) நியுரான் மீது பாயும் போது அவை வேதி பொருட்களை (Chemical compunds) சுரக்கின்றன, பல வகையான வேதி பொருட்கள் சுரக்கும், அவைகளுக்கு தான் 'நியுரோ ட்ரான்ஸ்மிட்டர்கள்' எனப் பெயரிடப் பட்டிருக்கிறது. 

இந்த வேதி பொருட்கள், உங்கள் உடம்பில் உள்ள அனைத்து செல்லுக்கும் தகவலை எடுத்து செல்லும் 'போஸ்ட்மேன்' மாதிரி. இந்த வேதி பொருட்களை வாங்கி கொண்டு அதன் படி செயல் பட செல்லில் 'ரிஸப்டார்கள்' உள்ளன. ஒவ்வொரு நியுரோ ட்ரான்ஸ்மிட்டருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்.. அதன் படி தான் நீங்கள் வெளிப்படுகிறீர்கள். 
  
மதுவில் கலந்திருப்பது எத்தனால் (C2H5-OH) என்ற வஸ்து, அது நீருடன் எளிதில் கரைந்து விடும் தன்மையுடையது. ஒரு கோப்பை மது உள் சென்றவுடன், அதில் இருக்கும் ‘எத்தனால்’ சிறு குடலினால் உரிஞ்சப்பட்டு, ரத்ததில் இருக்கும் தண்ணீருடன் கலந்து விடுகிறது. ரத்தம் உடல் முழுவதும் செல்வதால், உடலில் உள்ள அனைத்து செல்களும் எத்தனால் தங்கிக்கொள்ள இடம் கொடுக்கிறது. 

இது மூளையில் உள்ள நியுரான்களுக்கு செல்லும் போது, வழக்கமாக அங்கே சுரந்து கொண்டிருக்கும் சில ட்ரான்ஸ்மிட்டர்களை முடக்குகிறது. அது வரை சுரக்காத வேறு சில ட்ரான்ஸ்மிட்டர்களை ஆக்டிவேட் செய்கிறது. இதனால் இப்போது சிந்தனைகளில் மாற்றம் ஏற்ப்படும். இது மனிதர்களை பொறுத்து வேறுபடும்,

ரத்தத்தில் கலக்கும் எத்தனாலின் அளவு ஆதிகம் ஆக மூளையின் செயல் பாடு கொஞ்சமாக குறைகிறது. செல்களில் எத்தனால் தங்கிக்கொள்ள ஒரளவுக்கு தான் இடம் இருக்கிறது, எல்லையை மீறி மதுவை உட்செலுத்தினால், C2H5-OH இன் அளவு மிக அதிகமாகி, உடனடியாக மேலோகம் செல்வதற்கு விசா கிடைக்கும் கிளம்பி விடலாம்.. 

புரிகிறதா ??"

"என்ன கடவுளே.... கட்டிங்கயும் ஊத்தி குடுத்துட்டு இப்புடி கரன்ட்டையும் புடுங்கி வுடுரீங்களே... நீங்க நல்லா இருப்பீங்களா " ஒரு ஃப்லோவில் கேட்டு விட்டேன் கடவுளிடம்

"அதானால் தான் உங்கள் உடல், நீங்கள் குடிக்க ஆரம்பித்த நொடியில் இருந்து, நீங்கள் எடுத்து கொள்ளும் எத்தனாலை வெளியேற்ற நினைக்கிறது, உங்கள் கிட்னியும் நுரையீரலும் தங்களால் முடிந்த வரை C2H5-OH மாலிக்யுல்களை உருவி, நீருடனும், நீங்கள் வெளியிடும் சுவாசத்திலும் கலந்து அனுப்புகிறது. 

நீங்கள் யார் பேச்சையும் கேட்க்காமல் ஏதோ ஒரு காதல் தோல்விக்காக, ஒரு ஃபுல்லை ஒரே மடக்கில் கவிழ்த்தாலும், உங்களை ஆஃப் செய்து தூங்க வைத்து விட்டு நீங்கள் உட்செலுத்திய மதுவை வாந்தி எடுக்க வைத்து விடும் வல்லமை படைத்தது உடல், காதல் தோல்வியிலும் வாழத்தான் நினைக்கிறது, அவ்வளவு சீக்கிரத்தில் உங்களை விட்டு விடாது. சொல்லி விட்டு ஒரு மாதுளை பழத்தை எடுத்து உரிப்புகள் போட ஆரம்பித்தார் கடவுள்..

நான் ஜானி வாக்கரை கையில் எடுத்து மூடியை திறந்து

"இப்போ நான் உங்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கப்போறேன்... நீங்க ஒரு கடவுள்....

சரக்க பத்தி இவ்ளோ பேசுறீங்க... நீங்க அவ்ளோ பெரிய அப்பாடக்கர்னா...  நான் சொல்றத செஞ்சுக் காட்டுங்க.". 

சொல்லிக் கொண்டே ஒரு கிளாஸில் பாதி ஜானி பாதி தண்ணி ஊத்தி நன்றாக கலந்து விட்டு, கடவுளிடம் நீட்டி

இப்போ இதுல கலந்து இருக்கிற தண்ணியையும் மதுவையும் மீண்டும் தனித் தனியாக பிரித்து காட்ட முடியுமா ?? ஒரு மேதாவி மாதிரி கடவுளிடம் கேட்டேன்

"இதை பிரித்தெடுக்க கடவுள் வேண்டாம், உன்னை மாதிரி ஒரு முட்டாள் போதும். தண்ணீரை விட எத்தனாலுக்கு கொதிநிலை (Boiling point) குறைவு. இந்த கலவையை கொஞ்சம் சூடு படுத்தினால், தண்ணீருடன் கலந்திருக்கும் எத்தனால் முதலில் வாயுவாக வெளியேரும், தண்ணீர் மீதமிருக்கும். உனக்கு வேண்டுமென்றால் எத்தனால் வாயுவை குளிர்வித்து திரவமாக்கி குடித்து கொள்ளலாம்." ஒரு வெளிச்சமான பல்ப்பை குடுத்தார் கடவுள்.

இதை ஏன் கடவுளிடம் கேட்டேன்.... அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது

இதை மாதிரி தான் ஒரு முறை, நண்பர்களுடனான ஒரு டாஸ்மாக் சந்த்திப்பின் போது, சரக்கை பற்றி நான் சொற்பொழிவு ஆற்றி கொண்டிருந்தப்போது, அவை அனைத்தையும் பக்கத்து டேபிளில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு சக ட்ரங்க்கன் மங்கி என்னை இடை மறித்து கேட்ட கேள்வியை தான் இப்போது கடவுளிடம் கேட்டேன்..

கடவுளிடம் பதிலை கேட்டு குறித்து வைத்து கொண்டேன்.. அடுத்த அவனை சந்தித்தால் அவன் சரக்கிலே செய்முறை விளக்கம் குடுத்து விட வேண்டும் என்று தீர்மானித்து கொண்டு கடவுளை பார்த்தேன். 

கடவுள் பழங்களை விட்டு விளாசி கொண்டிருந்தார். அவர் சாப்பிடுவதை பார்த்ததும் எனக்கும் பசித்து விட்டது...

"கடவுளே எனக்கு ரொம்ப பசிக்குது.. நான் வெளிய போய் சிக்கன் ரைஸ் வாங்கிட்டு வாரேன்... ரெண்டு பேரும் சாப்பிடலாம்.." வெளிய கிளம்ப எத்தனித்தேன்..

"அதற்கு தான் இங்கு பழங்கள் குவித்து வைக்க பட்டிருக்கின்றன.." கை நீட்டி பழங்களை காட்டினார் கடவுள்.
 
"நோ... நோ.. டியர் காட்.. ஐ ஈட் ஒன்லி சோறு வித் கரி...

நீங்க இது வரைக்கும் சொன்னதெல்லாம் பெருசில்ல.. நான் ஒரு மேட்டர் சொல்றேன் கேளுங்க.. 

ஒரு மனுஷன் தன் வாழ்க்கைல ரெண்டே ரெண்டு விஷயத்த தான் ரொம்ப அனுபவிச்சு பன்னுவான்..

ஒன்னு சாப்புட்றது.. இன்னொன்னு தூங்குறது...

யு.... நோ... நான் இது ரெண்ட பத்தி நெறய கவிதைகள் கூட எழுதி வச்சிருக்கேன்... ஃபார் எக்ஸாம்பில்.. “தேடி சோறு நிதம் தின்று” என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு கவிதய கேளுங்க..

மீன் கரிய மிச்சம் வைக்காம சாப்பிடனும்..
கோழி கரிய கொடூரமா சாப்பிடனும்..
ஆட்டு கரிய ஆட்டய போட்டு சாப்பிடனும்..
மாட்டு கரிய மறச்சு வச்சு சாப்பிடனும்..

எப்புடி இருக்கு இந்த கவித..???. சற்று மிதப்புடன் கேட்டேன் கடவுளிடம்..

"தினமும் பழங்களை சாப்பிட்டு பழகு... முகத்தில் ஒரு பொலிவு வரும்.."  என்னை கவனிக்காமலே கூறினார் கடவுள்.

"ஓ... ஐ லவ் யு ஸோ மச் காட்.. இத நீங்க முதல்லயே சொல்லிருக்கலாம். ம்ம்ம்.. இந்த மாதிரி பழங்கள படச்சதுக்கே கடவுளுக்கு தனியா ஒரு படயல் வைக்கனும்.. என்ன நான் சொல்றது..??" ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து கடித்து விட்டு கேட்டேன்.

"இதற்கு நீ நன்றி சொல்லவேண்டியது மரங்களுக்கு தான், இந்த பழங்கள் இவ்வளவு சுவையாக உருவாக்கப் பட்டதில் ஒரு அடிப்படை காரணம் இருக்கிறது. இந்த பழம் மிகவும் கசப்பாக இருந்தால் நீ சாப்பிடுவியா??
என்னை நோக்கி கை நீட்டி கேட்டார் கடவுள்..

"காசு குடுத்து திங்க சொன்னா கூட திங்க மாட்டேன்..." தின்று கொண்டே கூறினேன்.

"அது தான் சூத்திரம்.. உனக்கு சுவையாக ஒரு பழத்தை தயாரித்து கொடுத்து, அதன் நடுவில் சுவையில்லாத தன் விதையை வைத்து அனுப்புகிறது. அதன் நோக்கம் தன் இனம் விருத்தியாக வேண்டும். அதற்காக உன்னை மட்டுமல்ல இன்னும் பல உயிரினங்களை உபயோகித்து கொள்கிறது. 

ஒரு பூவில் தேன் இருப்பது கூட இதற்காக தான். தேன் சுவையாக இருக்கிறது, தேனை எடுப்பதற்காக ஒரு வண்டோ அல்லது பூச்சியோ, பூ மீது அமரும் போது, அந்த பூ ஏற்கனவே தயாரித்து வைத்திருந்து மகரந்த தூள்கள் பூச்சியின் காலில் ஒட்டிக் கொள்கிறது, அடுத்த மலரிடம் அந்த பூச்சி செல்லும் போது அதன் காலில் ஒட்டியிருக்கும் மகரந்த தூள் அங்கு விழுந்து விடுகிறது, இது தான் அந்த மலரின் இனப்பெருக்கத்துக்கு தேவை.."

கூறி முடித்தாரா என்று தெரியவில்லை, பேசுவதை நிறுத்தி விட்டு ஜானி வாக்கரை தேட ஆரம்பித்தார்..

முதன் முறையாக இப்போது கடவுளுக்கு நானே ஒரு ரவுண்ட் ஊத்தி கொண்டிருக்கிறேன்.. 

"நான் உங்க கிட்ட ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே ஒரு கேள்வி கேட்டேன் நீங்க இன்னும் பதில் சொல்லல..

இந்த ப்ரபஞ்சம் இவ்ளோ அழகா இருக்கு... நினைத்ததெல்லாம் செய்யலாம்.. இயற்கை காட்சிகளை மட்டுமே பார்த்து கொண்டே இருக்கலாம்.. அவ்வளவு அழகு, இதை போய் ஏன் எல்லாம் மாயை... மாயை என்று கூறுகிறார்கள்” கேள்வியை மறுமொழிந்தேன்..

ஒரு சில நொடிகள் ஆழமாக ஒரு பார்வையை வீசி விட்டு.. 

"நான் உன்னிடம் ஒரு கற்பனை கதையை கூறுகிறேன். ஆனால் அது உண்மை. சிறிது கற்பனை செய்து பார்..

ஒரு கால்பந்து அளவில், களி மண்ணில் செய்த உருண்டை (பூமி), அதன் மேற்பரப்பில் ஒரு எறும்பை விட1.76 லட்சம் கோடி மடங்கு சிறிய அளவில் ஒரு உயிரினம் நின்று கொண்டிருக்கிறது, அது நீ தான்,

இப்போது அந்த பந்து அசுரவேகத்தில் சுற்றுகிறது, அந்த பந்து தன்னை தானே சுற்றிக்கொண்டு, அதி வேகத்தில் இன்னொரு பெரிய பந்தை (சூரியன்) சுற்றுகிறது, அந்த பெரிய பந்து இன்னும் அசுர வேகத்தில், தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, தன்னை மாதிரியே சுற்றிக்கொண்டு இருக்கும் கோடான கோடி பெரிய பந்துகளுடன் (சூரியன் மாதிரியான நட்ச்சத்திரங்கள்) சேர்ந்து ஒரு பெரிய கரும்குழியை (Black hole) சுற்றுகிறது.

இவை அனைத்தையும் மொத்தமாக சேர்த்து, ஒரு ‘கேலக்ஸி’ என்று நான் பெயரிடலாம். இதை மாதிரியே பல லட்ச கோடி கேலக்ஸிகள் இருக்கிறது. இதில் எந்த ஒரு பொருளும் ஒரிடத்தில் நிலையாக இருப்பதில்லை. அனைத்து பொருட்களும் அழிவை நோக்கி பயனிக்கின்றன. இதில் அதிவேகமாய் நீ அழிந்து போவாய். 

ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் அணுக்களின் கூட்டமைப்பு தான். நீ உடம்பாக சேகரித்து வைத்திருப்பது, பூமியில் நீ சேகரித்த அணுக்கள் மட்டுமே, அதை மீண்டும் பூமியே எடுத்து கொள்ளும். பூமியும் இல்லாமல் போகும். 

இது அனைத்தையும் ஒரு சேர, ஒரு கணம் அனுபவித்து விட்டால்..
நீயும் இதயே தான் கூறுவாய். அனைத்தும் மாயை... மாயை..”

ஒரு சில நிமிடங்கள் முழுவதும் நிசப்தம். பின் கடவுளே கலைத்தார்.

நான் உன்னுடன் இருப்பதாக கூறிய ஒரு மணி நேரம் கடந்து மேலும் ஒரு மணி நேரம் ஆகி விட்டது.. நான் விடை பெறுவதறக்கான நேரம், வந்து விட்டது.. என்னை பார்த்து கூறினார் கடவுள்.

"இல்லை இல்லை இன்னும் சிறிது நேரம்.. நான் உங்களிடம் முக்கியமாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியவைகள் சில தான், அதுவும் இனி தான் கேட்க வேண்டும்.. இன்னும் ரெண்டு ரவுண்டு தான் மீதி இருக்கு.. கொஞ்ச நேரம் இருந்து விட்டு போங்கள் கடவுளே.. கெஞ்சினேன்.."

(கடைசி கட்டிங் கவிழ்க்கப்படும்....)

Saturday, 17 March 2012

கடவுளுடன் ஒரு கட்டிங்: மூன்றாம் பகுதி


(கடவுளுடன் ஒரு கட்டிங்: இரண்டாம் பகுதியின் தொடர்ச்சி)


"வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளையும் மூடி விட்டு, அனைத்து விளக்குளையும் அணைத்து விட்டு இந்த ரூமிற்குள் வா” என்று கூறிக்கொண்டே எங்கள் வீட்டின் பெட் ரூமிற்குள் நுழைந்தார் கடவுள்.

ஏன் திடீரென்று கடவுள் நித்தியானந்தா மாதிரி பேசுகிறார் என்று குழப்பமாக பார்த்து கொண்டே அவர் கூறியதை நிறைவேற்ற துவங்கினேன்.

கடவுள் பெட் ரூமிறகுள் மெழுகுவர்த்திகளை பற்ற வைத்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. என்னவோ நடப்பது நடக்கட்டும் எது நடந்தாலும் நன்மைக்கே என்று எனக்கு நானே ஆல் இஸ் வெல் சொல்லிக்கொண்டு சரக்கு மற்றும் சை-டிஷ்களோடும் ரூமிற்குள் நுழைந்தேன்,

ஆஹா….!!! வாவ்…!!! என்ன இது..!!! 

என்னால் என் கண்களை நம்பவே முடியவில்ல.!!! ஆச்சர்யமாக ரூமை பார்த்து கொண்டிருந்தேன்.

அந்த ரூமில் மட்டும் மிதமான ஒரு குளிர், மேலே பார்த்தேன் ஆச்சர்யத்தின் உச்ச கட்டம்!!!. 

ரூமின் மேற்கூரையை காணவில்லை, இரவில் இருப்பது போல வானம் கொத்து கொத்தாக நட்சத்திரங்களுடன் மின்னியது. நான் காண்பது நிஜமென்றால், சச்சின் டெண்டுல்கர் மீது சத்தியமாக நான் மூன்று நிலவுகளை பார்க்கிறேன். ஆனால் என் வீட்டின் பெட்ரூம் அப்படியே இருக்கிறது. 

தரையில் நான்கு பெரிய மெழுகுவர்த்திகளை, ஒரு சதுரத்தின் ஒரங்களாக மாற்றி வைத்திருந்தார், நடுவே, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, இன்னும் சில ரகப் பழங்களை குவித்து வைத்திருந்தார், அனைத்தையும் மீறி காதுகளில் மெலிதாக துளைத்து செல்லும் நுண்ணிய மெண் இசை..

அசாதாரணமான காட்சியை கண்ணில் காட்டி விட்ட கடவுளோ ஒரு சாதரணமான டாஸ்மாக் ஆசாமி போல தரையில் உட்க்கார்ந்து இரண்டு கிலாஸ்களில் கட்டிங் ஊத்திக் கொண்டிருந்தார். ஏதும் பேசாமல், ஆச்சர்யத்தின் உச்சத்தில் கடவுளை பார்த்துகொண்டே அவரெதிரில் அமர்ந்தேன்.

இன்னும் நம்ப முடியவில்லை, மேல் நோக்கி ஒரு முறை பார்த்து விட்டு..

“வெளிய பகல் இந்த ரூம்ல மட்டும் இரவு. எப்படி இந்த அதிசயத்த செஞ்சீங்க..!!!! எனக்கும் சொல்லித்தாங்களேன்.” சிறு குழந்தை போல் கேட்டேன் கடவுளிடம்.

“இது, நீ நினைப்பது போல் அதியசம் ஒன்றும் இல்லை. மிகவும் சாதரணமான ஒன்று தான். உனது ரூமில் உள்ள ஒரு ‘புழுத்துளையை’ (Wormhole) பெரிதாக்கி, அதை, இங்கிருந்து 1.5 லட்சம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் வேறொரு கிரகத்தின் ஒரு பகுதியில் இருக்கும் ஒரு 'அண்டவெளி  புழுத்துளையுடன்' (Wormhole) இணைத்து விட்டேன், நீ இப்போது வானில் பார்த்து கொண்டிருப்பது அந்த கிரகத்தை சுற்றி வரும் 9 துணை கோள்களில் மூன்றை தான்.” இயல்பாக கூறினார் கடவுள்.

“செத்து போன எங்க பாட்டி பங்கஜம் மேல சத்தியமா ஒன்னும் புரியல.” தாமதிக்காமல் கூறினேன்.

"அதாவது, இப்போது நமது இருவருக்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளியில் பல லட்சம் அண்டவெளி புழுத்துளைகள் இருக்கலாம். (wormhole) இது வெட்ட வெளியில் இயற்கையாக இருக்கும் ஒரு ஒட்டை.
ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்து தோற்றங்களும் முப்பரிமாணங்கள் உடையவை என்பது உங்களுக்கு கண்கள் வழியாகவே தெரிகிறது..

நீ கையில் வைத்திருக்கும் மொபைல் ஃபோன் முப்பரிமாணமுடையது. அதன் மேற்பரப்பு பளிங்கு போல் மின்னினாலும் அதை நீ ஒரு எலக்ட்ரான் மைக்கரோஸ்கோப் வழியாக பார்த்தால் ஏராளமான குண்டு குழிகளை கண்டறியலாம். காலம் என்பது நான்காவது பரிமாணம், காலத்திலும் நிறைய மேடு பள்ளங்கள், இடைவெளிகள் உண்டு. அதை தான் அறிவியல் கணக்குகள் மூலமாக கண்டறிந்து புழுத்துளைகள் (Wormhole) என்று பெயரிட்டு இருக்கிறார்கள் தற்கால விஞ்ஞானிகள்.

நீ அம்பத்தூரில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு ஒரு துளையை எளிதாக கண்டுபிடிக்கலாம், அதை உபயோகித்து, நீ ஒரே வினாடியில், பல தடவை சென்னையிலுருந்து சிகாகோ சென்று திரும்பி வந்து விடலாம்.

ஆனால் அந்த மாதிரியான ஒரு புழுத்துளையை பெரிதாக்குவதில் நடைமுறையில் பல சிக்கல்கள் உண்டு, இன்னும் மனிதர்கள் யாரும் அதை செய்யவில்லை அதனால் தற்போது இது ஒரு கருதுகோள் சிந்தனை (Hypothetical). ஆனால், எனக்கு அது மிகச் சுலபமானது. இன்னும் விவரமாக தெரிந்து கொள்ள 'Wormhole' என்று விக்கிபீடியாவில் தட்டு, முடிந்தால் புரிந்து கொள்... ”

சொல்லி முடித்து விட்டு, ஊத்தி வைத்திருந்த கட்டிங்கை ஒரே கல்ப்பில் உள்ளே செலுத்தினார்.

இப்போது என் வருத்தம் கடவுள் சியர்ஸ் சொல்லாமல் சரக்கடித்து விட்டார் என்பது தான். இது வரை அவர் பேசியது ஒரு மண்ணும் புரியவில்லை. சரக்கடிக்க கூடாது என செய்திருந்த முடிவை இந்த ரூமிற்குள் நுழைந்த போதே தவிடு பொடியாக்கி அந்த பொடியை ஆம்லேட்டில் தூவி விட்டதால்,நானும் கடவுளை பின்பற்றி, ஒரே கல்ப்பில் உட்செலுத்தி ஊறுகாயை உறுதுனையாக உள்ளே அனுப்பினேன்.

கடவுள் இப்போது ஒரு தங்க ராஜா வடிகட்டி புகையிலையை எடுத்து பற்ற வைத்து புகை விட்டுக்கொண்டே..

“நீ எதற்காக எனக்கு அந்த ஐந்து ரூபாயை குடுத்தாய்..” என்று கேட்டார்

“எனக்கு தெரிஞ்சு கடவுள் நமக்கு ஏதாவது பன்னனும்னா, ஏதாவது கானிக்கை வைக்கனும், உடம்புல அலகு குத்தனும், தீமிதிக்கனும் இல்லனா பழய படத்துல வற்ர மாதிரி பாட்டு பாடி டான்ஸ் ஆடி கடவுள கூப்பிடனும்.இதுல ரொம்ப ஈஸியானது காசு குடுக்குறது தான், அது தப்பு தான் பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது, அதான் குடுத்தேன்..” பெருமிதமாக விளக்கினேன்.

எனது விளக்கம் அவரை கோபப்படுத்தியது போல் ஒரு பார்வை பார்த்தார்.

“இதனால் நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாய்” சிறிது முறைத்து கொண்டே கேட்டார்..

“எனக்கு ஒன்னும் வேணாம் கடவுளே. இந்த உலகத்துல இருக்குற எல்லா உயிரையும் எந்த நோய் நொடியில்லாம பார்த்துகோங்க.. 

அதுல நானும் இருக்கேன் அதனால என்ன கொஞ்சம் ஸ்பெசலா பார்த்துகங்க,, அது போதும்.” என்ற கோரிக்கையை, உலக உயிர்கள் அனைத்திற்கும் என்னை தலைவனாக பாவித்து கொண்டு கடவுள் முன் வைத்தேன். 

கடவுள் என் கோரிக்கையை காதில் வாங்கிய மாதிரி தெரியவில்லை. அடுத்த கட்டிங்கை ஊத்தி கொண்டிருந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இம்முறை அவருக்கு மட்டுமே ஊத்தி விட்டு..

"உன்னிடம் எத்தனை உயிரிகள் உள்ளன?? கேள்வியை கேட்டு விட்டு ஒரு கல்ப்பை உள்ளே தள்ளினார்.

நமக்கு லைட்டா கொசு கடிச்ச மாதிரி தான இருக்கு, கடவுளுக்கு ஏன் குப்புனு மப்பாயிடுச்சு என்று சிந்தனைகளை சிதற விட்டு கொண்டே..

“இதென்ன கேள்வி கடவுளே... என்னிடம் இருப்பது ஒரே ஒரு உயிரி தான்... அது நான் தான்..” சொல்லிவிட்டு நானும் ஒரு கட்டிங்கை ஊத்தி கடவுள் பாணியில் சாத்தினேன்.

“அப்படியா... நான் கணக்கு சொல்கிறேன் எண்ணிக்கொண்டே வா..

உன் இரைப்பையில் 500 வெவ்வேறு விதமான நுண் கிருமிகள் இடைவிடாமல் வேலை செய்து கொண்டிருக்கின்றன, உன் நுரையீரலில் சுமார் 200 வகையான நுண் உயிரிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, உன் வாயில் 150 க்கும் மேற்ப்பட்ட உயிரிகள் உள்ளன, உன் பெருங்குடலில் மட்டும் ஒரு பில்லியன் நுண்ணுயிர்கள், உன்னால் ஜீரனிக்க முடியாதவைகளை கூட, தான் ஜீரனித்து எடுத்து கொள்கிறது. உன் சிறு குடலில் மட்டும் சில ஆயிரம் உயிரிகள், எந்த நேரமும் உங்கள் குடலை துளைத்து, உங்கள் உடம்பின் செல்கள் எடுத்து கொள்ளவேண்டிய புரதங்களை அவை திருடி செல்கின்றன. உன் தோலாக இருப்பது செத்து போன செல்கள், அவைகளை இரையாக உண்பதற்காக என் நேரமும் உன் தோலில் எண்ணற்ற உயிர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. 

உன் உடல் என்பது 10000 ட்ரில்லியன் செல்களால் ஆன கூட்டமைப்பு, ஒவ்வொரு செல்லுக்கும் உயிரிருக்கிறது, அத்தனை உயிர்களால் ஆன கூட்டமைப்பு தான் நீ..” பட படவென கூறி முடித்தார் கடவுள்.

கேக்குறவன் கேனப்பயலா இருந்தா.. பாலா சார் படத்துல பவர் ஸ்டார் ஹீரோ.. கோச்சடையன் படத்துல கோவை சரளா ஹீரோயின்னு சொல்லுவீங்க போல... கட்டிங் தந்த மிதப்பில் கடவுளை கலாய்த்தேன்..

உன்னை மாதிரி பதர்களுக்கெல்லாம் எப்பவும், எது சொன்னாலும் புரியாது. நேரமிருந்தால்  “BBC: Things you need to knowஎன்ற டாக்குமென்ட்ரியை டவுன்லோட் செய்து பார்த்து கொஞ்சமாவது தெரிந்து கொள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே..

“இனி ஜல்சா பன்னுங்கடா குஜாலா ஜில்ல்ப்பா காட்டுங்க டா..” என் மொபைலின் ரிங்க் டோன் உரக்க ஒலித்தது, எடுத்து பார்த்தேன்.. “ஊட்டி வாயன் காலிங்..” என்று காட்டியது. மொக்க போட சிக்கிவிட்டது ஒரு சிறந்த அடிமை என்ற குஜாலில். ஃபோனை அட்டன்ட் செய்து..

“டே மச்சி எங்க இருக்க..” ஒரு வார்த்தை தான் கேட்டேன்..

“செங்கல்பட்டு பக்கம் வந்துட்டு இருக்கேன் மச்சி... இன்னும் ரெண்டு மணி நேரத்துல ரூமுக்கு வந்துருவேன்... ரூம ஒழுங்கா பெருக்கி சுத்தமா வச்சுரு..... இல்லனா ரூமுக்கு வந்ததும் பச்ச பச்சயா கிழிப்பேன்.... இப்பவே சொல்லிட்டேன்....” இரைந்து தள்ளினான்..

அடப்பதரே.. நான் யாருடன் இருக்கிறேன் தெரியுமா.. எங்கிருக்கிறேன் தெரியுமா.. என்று கேட்கலாம், என்று நினைத்த வேலையில் தான் கடவுள் கூறிய இரண்டாவது நிபந்தனை நினைவில் வந்தது,,

“நான் உன்னுடன் இருப்பதாக சொல்லி, ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போட கூடாது”
 
இவனிடம் விஷயத்தை சொல்வதும் ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவதும் ஒன்று தான் என்று முடிவு செய்து விட்டு ஃபோனை கட் செய்து விட்டு, பேட்டரியை உருவி போட்டு விட்டேன்..

இதற்குள் கடவுள் முக்கால்வாசி பாட்டிலை முடித்து விட்டார். மேல் நோக்கி விண்ணில் இருந்த மூன்று நிலவுகளை பார்த்து  ரசித்து கொண்டிருந்தார்..

“இந்த ப்ரபஞ்சம் இவ்ளோ அழகா இருக்கு... நினைத்ததெல்லாம் செய்யலாம்.. இயற்கை காட்சிகளை மட்டுமே பார்த்து கொண்டே இருக்கலாம்.. அவ்வளவு அழகு, இதை போய் ஏன் எல்லாம் மாயை... மாயை என்று கூறுகிறார்கள்” அழுத்தமான பார்வையுடன் கடவுளிடம் வினவினேன்

ஹா ஹா ஹா.. மாயை மாயை.. “ சிறிது உரக்க சிரித்து விட்டு, என்னை நோக்கி..

அந்த பாட்டிலை எடு என்று கூறினார்....

(கட்டிங் ஊத்தப்படும்...)

Monday, 12 March 2012

கடவுளுடன் ஒரு கட்டிங்: இரண்டாம் பகுதி

(கடவுளுடன் ஒரு கட்டிங்: முதல் பகுதியின் தொடர்ச்சி) 

என் கடவுள் கொஞ்சம் வித்தியாசம் ஆனவர், அதிகம் பேசமாட்டார். ஆனால், பேச ஆரம்பித்தால் நிறுத்துவது கொஞ்சம் கடினம் தான். சில நேரங்களில் கடுஞ்சொற்களுடன் கருத்துகளை வெளியிடுவார். இருந்தாலும், அதை யாரும் விமர்சனம் செய்ய முடியாது, ஏனென்றால், அவருடைய ஒரே பக்தனாகிய நான், அதை விட கடுஞ்சொற்களை அசால்ட்டாக உபயோகித்து வருவதால் அவருடைய சொற்கள் யாரையும் புண் படுத்த போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

நானும் எனது கடவுளும், எங்களது வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் வரையில், கடவுளை எப்படி கவர்வது என்ற ஆராய்ச்சி கட்டுரை தான் எனது மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

“இன்னைக்கு ரெண்டு மணி நேரம் கூடுதலா புடுங்கிட்டானுங்க.. படுபாவி பயலுவ.. வெளங்குவானுங்களா”. 

கீழ் வீட்டு பெரிய கிழவி, மெகா சீரியல் பார்க்க முடியாத கடுப்பில் மின்சார வாரியத்தை பிரித்து மேய்ந்து கொண்டிருத்தது.

காலை சாப்பாட்டிற்கு போன கரன்ட் சரியாக மதிய சாப்பாட்டிற்கு வந்திருந்தது.

அப்போது தான் நினைவிற்கு வந்தது, 

“கடைசியாக, ஊட்டி வாயன் ஊருக்கு போகும் போது ரூமை பெருக்கி விட்டு போனான், அவன் போய் ரெண்டு வாரம் ஆச்சு. சுத்தமான இடத்தில் தான் கடவுள் வசிப்பார் என்று படித்திருக்கிறோம்... போச்சுடா கடவுள் கடுப்பாக போறாரு” என்று நினைத்து கொண்டே கதவை திறந்தேன்.

ரூமை ஒரு தடவை சுற்றி பார்த்து விட்ட கடவுள்..

“கரப்பான், எட்டு கால் பூச்சி, எறும்பு போன்ற உயிரிகளுக்கு உங்கள் இருப்பிடம் மிகவும் பிடிக்கும்” என்று கூறினார்

இதை கேட்டவுடன், வெகு நாட்களாக கடவுளை பார்த்தால், கண்டிப்பாக கேட்க வேண்டுமென்று நினைத்திருந்த ஒரு கேள்வியை கேட்டேன்..

“கடவுளே.... நீங்க டைனோசர படச்சது கூட ஏன்னு கேக்க மாட்டேன், ஆனா, இந்த கொசுவ ஏன் படச்சீங்க. கொசுத் தொல்ல தாங்க முடியல கடவுளே.”

நியாயமாக பார்த்தால் இந்த கேள்வியை கொசு தான் என்னிடம் கேட்க வேண்டும். ஒரு டைனோசரை கடிச்சிட்டு கூட அது தப்பிச்சுடும், ஆனா உங்கள கடிச்சா தான் அடி வாங்கி செத்து போகுது. கொசுக்களுக்கு உங்கள் ரத்தம் இரையாக தேவைப்படவில்லை.
 
உங்களை கடிப்பது பெண் கொசுக்கள் மட்டுமே. ஆண் கொசுக்கள் யாரையும் கடிப்பதில்லை. கர்ப்பமாக இருக்கும் பெண் கொசுக்களுக்கு, தங்களது வாரிசுகளை வளர்க்க, புரதம் (protein) கலந்த இரத்தம் தேவை படுகிறது. அதனால், முடிந்த வரை உங்களுக்கு வலிக்காத மாதிரி பார்த்து கொண்டு, உங்கள் இரத்தத்தை உறிஞ்சுகிறது. ஒரு கொசுவினால், தண்ணீரின் மேற்பரப்பில் உள்ள 'பரப்பு இழுவிசையை' (Surface tension) உபயோகித்து தண்ணீரின் மேல் நடந்து செல்ல முடியும், நடனமாட முடியும், உன்னால் முடியுமா..??  ” 
கேள்வியுடன் முடித்தார் கடவுள்.

ஆனால் இதை பற்றி இப்போது பேச வேண்டிய தேவை இல்லை. கடவுளை என் வசம் சாய்த்து விடுவதற்காக நான் ஏற்கனவே சிந்தித்து வைத்திருந்த வழிமுறைகளை கட்டவிழ்த்து விடலாமென்று முடிவு செய்தேன். 

முதலில்..

பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு ஐந்து ரூபாயை எடுத்து கடவுளிடம் நீட்டினேன். “எதற்கு இது” என்கிற மாதிரி என்னை பார்த்தார்.. 

“இதை என்னுடைய காணிக்கையாக வைத்து கொள்ளுங்கள்.. என்னை எந்த நோய் நொடியும் இல்லாமல் கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ளுங்கள்” பய பக்தியுடன் கூறினேன்.

கடவுளின் முகம் இறுக்கமாக மாறியது. அவர் கோபமாக மாறுவதை என்னால் உணர முடிந்தது..

சட்டென்று ஐந்து ரூபாயை பாக்கெட்டில் வைத்து விட்டு, பர்ஸில் இருந்து ஒரு ஐனூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். 

“ஸாரி கடவுளே எங்கிட்ட இவ்ளோ தான் இருக்கு.”

இம்முறை கடவுளின் கண்கள், கேப்டன் விஜயகாந்த் கண்கள் அளவிற்கு சிவந்திருந்தது. என்ன நினைத்தாரென்று தெரியவில்லை. கோபமாக என்னை பார்த்து..

“ஏண்டா வெண்ன... இது என்னடா உனக்கு பழக்கம், கோவிலுக்கு வெளிய இருக்குற பிச்சைகாரனுக்கும் காசு தான் குடுக்குற, உள்ள இருக்குற கடவுளுக்கும் காசு தான் குடுக்குற என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது..” அடிக்கிற மாதிரி கேட்டார் கடவுள்.

இந்த கேள்வியை நான் சிறிது கூட எதிர்ப்பார்க்கவில்லை, அடுத்து என்ன சொல்வதென்று கூட தெரியவில்லை, நாம் செய்த தவறை, கையும் களவுமாக பிடித்து விட்ட ஒரு வாத்தியார் முன் நிற்பது போல் பம்மிக்கொண்டே ஓரக்கண்ணால் கடவுளை நோக்கினேன்..

கடவுளின் பார்வை இப்போது எங்கள் வீட்டின் சமயலறையில் ஒரு ஒரமாய் குவித்து வைக்கப்பட்டிருந்த பாட்டில்களின் மீது பதிந்திருந்தது, அதில் ஒய்யாரமாக வீற்றிருந்த ஒரு நீலக்கலர் பாட்டிலை காட்டி, 

“உடனடியாக சென்று அதை வாங்கி வா” என்று கூறினார்..

“கடவுளே…. சும்மா காமெடி பன்னாதீங்க.. அது என்ன தெரியுமா..??.” சிறிது அதிர்ச்சியுடன் வினவினேன்

“நன்றாக தெரிந்து தான் கேட்கிறேன், உடணே சென்று அதை வாங்கி வா..” கட்டளையிட்டார் கடவுள் 

"என்ன மாதிரியான கடவுள் இவர். கடவுள் தண்ணி அடிப்பாரா..??. அப்படி அடிச்சா அவரு கடவுளா??.." ஒரு நிமிட நேரத்தில் பல சிந்தனைகள் கடந்து சென்றன..

“நீங்க ஒரு கடவுள்... நீங்களே சரக்கடிச்சா எப்படி ?????” அரை மணதுடனே கேட்டேன்..

“ஏன் கூடாது... கடவுள், கல்யானம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் வாழும் போது, நான் தண்ணி அடிக்க கூடாதா??” யதார்த்தமாக வினவினார் கடவுள்.

இதற்கு மேல் கேள்வி கேட்டால், எவருக்குமே புரியாத மாதிரி பதில் சொல்லுவார், 

“புரிந்த மாதிரியும்.... அதே சமயத்தில் புரியாத மாதிரியும் பதில் சொன்னால்.... நீங்கள் தான் கடவுள் # செல்வா...” என்று ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போடலாமா என்று சிந்தித்து கொண்டே ரூமை விட்டு வெளியே வந்து  ‘எலைட்’ டாஸ்மாக் நோக்கி நடந்தேன்.

கடவுள் கை நீட்டி காட்டிய அந்த பாட்டில், நான் குடித்தவரையில், அது தான் விலையுர்ந்த சரக்கு, அதுவும், பாண்டிசேரியில் இருந்து வந்த ஒரு நண்பன் ஓசியில் வாங்கி கொடுத்தது. நமது ரூமிற்கு வருகிற மனிதர்கள் நம்மை பற்றி உயர்வாக கருத வேண்டுமென்று சொல்லி, ஊட்டி வாயன் தான் அதை ஒய்யாரமாக உட்கார வைத்தான். 

ஐந்து ரூபாயில் கடவுளை கவர்ந்து விடலாம் என்று நினைத்தேன், ஏ.டி.எம் கார்டில் ஐந்தாயிரம் எடுக்க வைத்து விட்டான், கடுப்புகள் முழுவதும் இப்போது ஊட்டியின் மேல் திரும்பியது. இருந்தாலும், தற்போது, வேறொரு திட்டம் மனதில் ஓடிக்கொண்டிருப்பதால் அவனை மன்னித்து விடலாம்.

திட்டம் இது தான். 

இது ஒரு அறிய வாய்ப்பு, கடவுளுக்கு இன்று நன்றாக ஊத்தி கொடுத்து சில பல ரகசியங்களை கறந்து விட வேண்டும். முக்கியமாக, கடவுள் எவ்வளவு வற்புறுத்தினாலும் சரி, நாம் குடிக்க கூடாது. திட்டவட்டமான முடிவுகளுடன் வீட்டிற்குள் நுழைந்தேன்...

எங்கள் வீட்டில் இருந்த கலைஞர் டி.வி.யில்.. இசையருவி சேனலை பார்த்து கொண்டிருந்தார் கடவுள்..

“ஆண்டவன பார்க்கனும்.. அவனுக்கும் ஊத்தனும்... அப்புறமா கேள்வி கேட்கனும்... என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது...”

(இனி வருவது... கடவுளின் சர வெடி கருத்துகள்.. தொடரும்.....)

Thursday, 8 March 2012

கடவுளுடன் ஒரு கட்டிங்: முதல் பகுதி

அன்று,

சரியாக காலை மணி 8. என் உயிர் நண்பன் கல்மாடி, வீட்டு மாடியில் இருந்து, பல் துலக்கிக் கொண்டே எதிர் வீட்டு வாசலை நோக்கி கொண்டிருந்தான். அவனது முழுப்பெயர் ‘அலெக்ஸ் கல்மாடி’, இருந்தாலும், நண்பர்கள் மத்தியில் அவனை ‘ஊட்டி வாயன்’ என்றே அழைத்து வருவதால், அவனது சொந்த பெயர் அவனுக்கே மறந்து விட்டது.


“டே மச்சி.... கடவுள் இருக்குறாரு டா ...!!!”

ஊட்டி வாயனின் அலறல், உரக்க கேட்டது. இரவு முழுவதும் கடவுளை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம். “கடவுள் இருக்கிறாரா இல்லையா” இது தான் டாபிக். இறுதி வரை, அவன் பேசியதை நானும், நான் பேசியதை அவனும் கேட்கவில்லை. அதனால், இருவரும் வெற்றி பெற்றதாக நினைத்து கொண்டு தூங்கி விட்டோம். இது தினமும் நடப்பது தான்..


“மச்சி நான் கண்டிப்பா சொல்றேன்.. கடவுள் இருக்குறாரு டா..”

ஊட்டி மறுபடியும் கூவினான்.


காலைலே ஆரம்பிச்சிட்டியா உன் மொக்கய ” கேட்டுக்கொண்டே நானும் மாடிக்கு வந்தேன்.

“டே.. எதிர் வீட்டு நித்யா.... இப்ப கூட வெளிய வந்து பாத்துட்டு போனா டா.. நைட்டே உங்கிட்ட சொன்னேன்ல, கடவுள் எங்க ரெண்டு பேரயும் சேர்த்து வைப்பாரு பாரு டா...” ஊட்டி சந்தோஷமாக கூறினான்.

ஒரு முறை அவனை காரி துப்புகிற மாதிரி பார்த்து விட்டு..

“உனெக்கெல்லாம் வெட்கமாவே இல்லயா டா...இதே டயலாக்க தான கீழ் வீட்டு ஏஞ்சல்க்கு சொன்ன..” என்று கேட்டேன்

“ஹா.. ஹா.. அதுக்கு தான் மச்சி நான் ரெண்டு கடவுள கும்புடுறேன்,, அவளுக்கொரு கடவுள்... இவளுக்கொரு கடவுள்..” சீரியசாக கூறினான்.

அதற்கு மேல் அவனிடம் பேசி கடுப்புகளை டவுன்லோட் செய்து கொள்ள விரும்பவில்லை.

“மச்சி... எனக்கொரு ‘ஐடியா’. நாம ஏன், நமக்குனு ஒரு கடவுள கண்டுபிடிக்க கூடாது” என்னை போக விடாமல் தடுத்து கேட்டான்..

“கடவுள கண்டுபுடிக்கனுமா....!!. என்ன டா லூசு மாதிரி பேசுற, கடவுள் என்ன காணாம போன ஏ.டி.எம் கார்டா கண்டுபுடிச்சு எடுக்குறதுக்கு” எரிச்சலுடன் கேட்டேன்.

“உனக்கொன்னும் தெரியாது... என் சின்ன வயசுல, எங்க பாட்டி எங்கிட்ட நெறய தடவ சொல்லிருக்கு... கடவுள் அடிக்கடி பூமிக்கு வந்து உளவு பார்பாராம், தப்பு செய்ரவங்க பேர ஒரு நோட்ல எழுதி வச்சுக்கிட்டு, செத்த பிறகு தண்டன குடுப்பாராம்...” ஊட்டி சொல்லிக் கொண்டே இருந்த நேரத்தில், எதிர் வீட்டு நித்யா கல்லூரிக்கு கிளம்பி வெளியேறியதால் சங்கத்தை அத்துடன் கலைத்து விட்டு சென்று விட்டான்..

து நடந்து சில நாட்கள், மாதங்கள், தாறு மாறாக ஒடிய பின்பு, இன்று தான் திடிரென்று நினைவில் வந்தது அந்த ‘கடவுள் ஐடியா’. அதுவும், எதிர் வீட்டு நித்யாவை அவள் கனவனுடன் பார்த்தவுடன் தான். இருந்தாலும், ஊட்டி வாயன் ஏன் அப்படி சொன்னான். அவன் ஒரு அண்ட புளுகன் என்பது ஊரறிந்த செய்தி, ஆனால் ஒரு சில நேரங்களில் அவன் அறிவாளி போலவே பேசுவான். இது ஏன் அப்படி இருக்க கூடாது...?? 
  
பல குழப்பங்களுக்கு தீர்வாக, என்னை நானே தேற்றி கொள்வது தான் சிறந்த முடிவு. சரி, கடவுளை உன்மையாக நம்பினால் அவரே நம்மை தேடி வருவார் என்று எங்கோ படித்தது ஒடிக்கொண்டிருக்க, மெதுவாக தெருவில் இறங்கி நடந்தேன். இன்று ரூமில் யாரும் இல்லை, மீன் குழம்பு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு, தனி ஆளாக இருந்தாலும் பரவாயில்ல, சமைத்து விடுவது என்று முடிவு செய்து மீன் மார்க்கெட் நோக்கி நடயை கட்டினேன்.



மீன் மார்க்கெட் முழுவதும் மக்கள் வெள்ளம். “அது ஏன் இந்த ஒரு நாளில் மட்டும் இத்தனை பேர் மீன் சாப்பிடனும்னு நினைக்கிராய்ங்கஎன்று எனக்குள்ளே கேட்டுக் கொண்டு, கூட்டம் கம்மியாக இருக்கிற ஒரு கடையை தேர்ந்து எடுக்க முயன்ற போது தான் அவரை கவனித்தேன். பாத்தவுடனே ஏதோ பொறி தட்டியது. அனைத்து மக்களும், மீன் கடையில் தம் கட்டிவிலை குறைப்புவேலையை பக்காவாக செய்து கொண்டிருந்த போது, அவர் மட்டும், வெளியே சிதறி கிடந்த ஒரு மீனை கையில் எடுத்து, ஆழமாக பார்த்து கொண்டிருந்தார். பேசியே தீர வேண்டும் என்ற உந்துதலில், அருகில் சென்று,

எதுக்கு அந்த மீன வெறிச்சு பாக்குறீங்க, அது கெட்டு போச்சு, தூர போடுங்க”  என்று கூறினேன்.


பதில் எதுவும் கூறாமல், அந்த மீனை கீழே போட்டு விட்டு என்னை கடந்து சென்று விட்டார். விடாமல் துரத்தி சென்று,


 “உங்கள நான் எங்கேயோ பாத்துருக்கேன்.. நீங்க எந்த ஊரு பாஸ்?..” என்று கேட்டேன்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த ஊரு தான் பாஸ்..” என்று சொல்லி விட்டு மீண்டும் நடக்க முயன்றார்..

எதுக்கு அந்த மீன அப்படி பார்த்தீங்கன்னு மட்டும் சொல்லிட்டு போங்கநான் அவரை போக விடவில்லை. என் கேள்வியை கேட்டு, என்னிடம் நெருங்கி வந்து, என்னை ஒரு முறை உற்று பார்த்து விட்டு..

உனக்கெல்லாம் சொன்னா புரியதுஎன்று எனக்கு மட்டும் கேட்கும் படி கூறினார்.


பரவால்ல.. சொல்லுங்க பாஸ்.. எங்களுக்கும் எல்லாம் தெரியும். கைலயே மொபைல் இன்டெர்நெட் இருக்கு.. நீங்க எது சொன்னாலும் அஞ்சே நிமிஷத்துல கண்டு புடிச்சுருவோம்ல..”  கையில் இருந்த நன்பனின் ப்ளாக் பெர்ரியை எடுத்து காட்டினேன்..

ஒரு சில வினாடிகள் என்னை அமைதியாக பார்த்து விட்டு..

பூமியில் வாழும் உயிரினங்களில், எலும்புள்ள அனைத்தும், மீனுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியாக வேண்டும். உங்களின் உடலில் அமைந்துள்ள எலும்புகளின் மூதாதையர்கள் இந்த மீன்கள் தான், இவைகளுக்கு தான் முதன் முதலில் எலும்பு தேவைப் பட்டது, அதற்கு முன்னர் இருந்த, முள் இல்லாத உயிரியில் இருந்து, காலப்போக்கில், தங்கள் தேவைக்காக உற்பத்தி செய்த முட்கள் மாதிரியான எலும்புகள் தான் உங்களுக்கு பரினாம வளர்ச்சியில் எலும்புகளாகவும், அதை உற்பத்தி செய்த மீன்கள், இறையாகவும் கிடைக்கிறது பொறுமையாக பேசி முடித்தார்..

ஊட்டி வாயன் பாட்டி சொன்னது உன்மை தான் டா.. இவரு சொல்றது ஒன்னுமே புரியல.. கண்டிப்பா இவரு கடவுளா தான் இருக்கனும்என்று யோசனை ஓடிக்கொண்டிருக்கும் போதே கேட்டு விட்டேன்..

நீங்க கடவுள் தான???!!!...”

இந்த கேள்வியை கேட்டு அவர் சிறிதும் ஆச்சர்ய படவில்லை. மாறாக சந்தோஷமாக என்னை பார்த்து..

நான் இந்த பூமிக்கு வந்து முப்பது வருஷங்கள் ஆகுது. இது வரை யாரும் என்னை கண்டுபிடிக்க வில்லை. நீ தான் என்னை சரியாக கனித்தாய்என்று கூறி விட்டு மறுபடியும் சிரித்தார்.



கடவுள் என்ற உடன், ‘அறை எண் 305’ படத்தில் வரும் ப்ரகாஷ்ராஜ் மாதிரி நினைத்து விடாதீர்கள். என் கடவுள் பார்ப்பதற்குவிருமாண்டிபடத்தில் வரும் பசுபதி மாதிரி தான் இருக்கிறார். கடும்கோபக்காரர் என்பது முக பாவனைகளை பார்க்கும் போதே நன்றாக புரிகிறது.
  

நான் தான் உங்களுக்கு முதல் பக்தன்.!!!!.. எனக்கொரு வரம் தாருங்கள் என்று கேட்டேன்.

நீ தான் எனக்கு ஒரே பக்தன்.. வேறு யாரிடமும் நான் பேசுவது கூட கிடையாது.. பேசவும் மாட்டேன். நீ வரத்தை கேளு என்னால முடிஞ்சா குடுக்கிறேன் என்று கூறினார்


என் கூட வந்து ஒரு நாள் எங்க ரூம்ல நீங்க தங்கனும்..” கூறி விட்டு, ஆவலுடன் பதிலை எதிர் நோக்கினேன்..



நீ பொன்னோ பொருளோ கேட்டிருந்தால், உன்னை உமிழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன்….!!!. 


உன் ஆர்வத்தினால், உன்னுடன் ஒரு மணி நேரம் இருக்கிறேன், ஆனால், இரு நிபந்தணைகள்,


ஒன்று.. 

என்னுடைய கருத்துகளை யாரிடமும் பரப்ப கூடாது

இரண்டு,. 

நான் உன்னுடன் இருப்பதாக சொல்லி, ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போட கூடாது சொல்லி விட்டு அழுத்தமாக என்னை பார்த்தார்.


நமக்கு, கடவுள் மீது சத்தியம் செய்வதென்பது, சரக்கடிச்சுட்டு சன் மியுஸிக் பார்ப்பது போன்றது, என்பது கடவுளுக்கு தெரியாததால், அவர் மீதே சத்தியம் செய்து வைத்தேன்..

எங்களது ரூமிற்கு செல்லும் வழியில் நானும் என் கடவுளும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை, ஆனால், என் மனதில், ஒரு ஜாவா ப்ரோக்ராமிங்கே ஓடிக் கொண்டிருந்தது,

கைல கால்ல விழுந்தாவது கடவுள எங்க ரூம்லயே தங்க வச்சுரனும்.. 

கடவுள எப்புடி நம்ம வழிக்கு கொண்டு வரலாம்


இதுவரை மக்கள் எப்புடி கடவுளை தங்கள் வழிக்கு கொண்டுவந்தார்கள்..??????????????