Tuesday 18 September 2012

சகல கலா ஜீன்ஸ் - பெயர்க்காரணம்

(இந்த பதிவு முழுக்க முழுக்க ‘செக்ஸ்’ பற்றிய விழிப்புணர்வு தான்.. அதனால் பதினட்டு வயதுக்கு கீழுள்ளவர்கள் இதை தயவு செய்து நேரம் செலவிட்டு படிக்கவும்.. நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டாம்)

செக்ஸ் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது தான், இன்றியமையாததும் கூட, ஆனால், செக்ஸ் என்று நான் சொல்ல வருவது மனிதனை மட்டும் சார்ந்தது அல்ல. இது, ஒவ்வொரு உயிரின் செக்ஸையும் ஆராய்வது. மனிதனின் செக்ஸையும், அதை சார்ந்த விஷயங்களையும் ஏற்கனவே பல மஞ்சள் எழுத்தாளர்கள் எழுதி விட்டதால் நான் தனித்து நிற்க விரும்புகிறேன். நான் ஆராய்வது செக்ஸ் என்ற வார்த்தையின் அடிப்படையை, அதனால் தான் கூறினேன், நாற்பது வயது மேலுள்ளவர்கள் இதை படிக்க வேண்டாம் என்று.

எனக்கும் உனக்கும் மற்றும் இதை வாசிக்கும் அனைவருக்கும் மட்டும் தான் செக்ஸ் உணர்வு உள்ளது என்று தப்பு கணக்கு போட்டு கொண்டிருந்தேன். ஆனால்,, என் அறையில் உள்ள பல்லி, பாச்சான், பூரான், பாம்பு மற்றும் கொசு முதற்கொண்டு ‘அதை’ கடமையாக செய்து கொண்டிருக்கும் போது, நான் அவைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் போது, நான் அவைகளாக பிறந்திருக்கலாம் என்று எண்ணும் போது எழுந்த சிந்தனையின் ஆராய்வின் முடிவாக கூட இது இருக்கலாம்.

என் வீட்டில் இருக்கும் ஒரு மாமரத்தை கேட்கிறேன், நீ எப்படி இனப்பெருக்கம் செய்கிறாய் என்று, அது சிரித்து கொண்டே கூறுகிறது, அது எளிதானது தான், உனக்கு சுவையாக ஒரு பழத்தை தயாரித்து கொடுத்து, அதன் நடுவில், சுவையில்லாத என் விதையை வைத்து அனுப்புகிறேன், நீ பழத்தை தின்று விட்டு விதையை தூக்கி எறிந்து விடுகிறாய், ஏணென்றால் என் விதை உனக்கு ருசியாக இல்லையென்பதால் தான். அதை அவ்வாறு தயாரித்தது நான் தான், நீ உனக்கு லாபமாக என்னை பார்க்கிறாய். நான், என் இனத்தை பெருக்கி கொள்ள ஒரு வாய்ப்பாக உன்னை பார்க்கிறேன், நீ மட்டுமல்ல எனக்கு அடிமையாக பல உயிரனங்கள் உண்டு என் நோக்கம் ஒன்று தான், என்னை இவ்வுலகம் முழுதும் பரப்ப வேண்டும் என்பது மட்டும் தான். அதற்காக உன்னை மட்டுமல்ல இன்னும் பல உயிரினங்களை உபயோகித்து கொள்கிறேன்.

அதற்கு மேல் அம்மரத்திடம் பேச விருப்பமில்லை. அடுத்ததாக என் கண் முன்னே பறந்து சென்ற ஒரு சிறு வண்டை கவனித்தேன், அது ஒரு மலர் மீது சென்று அமர்ந்தது, அதனிடம் பேச விரும்பி, மெதுவாக அதனிடம் சென்றேன், என்னை கவனித்து விட்ட அவ்வண்டு சட்டென தன் இறக்கை விரித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கலைந்து விட்டது, இப்போது அவ்வண்டு அமர்ந்திருந்த மலர் என்னை முறைத்து பார்ப்பதை கவனித்து விட்டேன். எதற்காக என்னை முறைக்கிறாய், நான், உன்னை அந்த வண்டிடம் இருந்து காப்பற்றி இருக்கிறேன். என்னை நீ பாராட்ட வேண்டும் என்று கூறி முடிப்பதற்குள்,, அம்மலர் என்னை நோக்கி தொண்டை கிழிய கத்த ஆரம்பித்தது.

“அடே மூடா.. என் வாழ்க்கையை கெடுத்து விட்டாயே, நீ நல்ல இருப்பியா.. “
திகைப்பில் நான் அழ்ந்திருந்த போது....சிறிது நேர அழுகைக்கு பிறகு அதுவே கூறத் தொடங்கியது...

என்னிடம் தேன் சுவையாக இருக்கிறது, தேனை எடுப்பதற்காக ஒரு வண்டோ அல்லது பூச்சியோ, என் மீது அமரும் போது, நான், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்து மகரந்த தூள்கள் அப்பூச்சியின் காலில் ஒட்டிக் கொள்கிறது, அடுத்த மலரிடம் அந்த பூச்சி செல்லும் போது அதன் காலில் ஒட்டியிருக்கும் மகரந்த தூள் அங்கு விழுந்து விடுகிறது, இது தான் ஒரு செடியின் இனப்பெருக்கத்துக்கு தேவை. அதையும் கெடுத்து விட்டாயே பாவி...
ஒரு மலர் அழுததை அப்போது தான் பார்த்தேன். பெரிதாக அலட்டிக் கொள்ளவிள்ளை. அன்று தான் முழுதாக மழை நனைத்திருந்தது பூமியை, ஆதலால், என் வீட்டினுள் சிறு குட்டை தேங்கி விட்டது சென்னை மா நகராட்சியின் அலட்சியத்தால்... ஆனால், அக்குட்டையில் தேங்கி நின்ற தண்ணீரில், நான் கவனித்து விட்டேன் அத்தவளைகளை. கூட்டம் கூட்டமாக கத்திக்கொண்டிருந்தன, ஒரே ஒரு தவளை மட்டும் அமைதியாக இருந்ததை நான் அவதானித்து விட்டேன், என் அவதானிப்பை அதுவும் அவதானித்து விட்டு என்னை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது.. நான் பேச முற்படும் முன் அதுவே பேச தொடங்கியது, எதற்காக நாங்கள் இவ்வளவு சத்தம் எழுப்புகிறோம் என்று தானே யோசித்து கொண்டு இருக்கிறாய்.. பதிலை நானெ கூறுகிறேன்

“ஆண் தவளைகள் மட்டுமே அந்த சத்தங்களை எழுப்புகின்றன. ஒரு பெண் தவளையானது, சத்தம் எழுப்பி கொண்டிருக்கும் ஆண் தவளைகளை உன்னிப்பாக கவனிக்கிறது, எந்த தவளை, கடைசி வரை, இடைவிடாமல் முழு ஆற்றலோடு சத்தம் எழுப்புகிறதோ அந்த தவளையை தேடி சென்று இனப்பெருக்கம் செய்கிறது. மற்ற தவளைகள் ஒதுங்கி கொள்கின்றன.. இனப்பெருக்கத்துக்காக தான் இவ்வளவு ஆற்றல் வீணாகி கொண்டிருக்கிறது.. வேறொன்றுமில்லை..,இனப்பெருக்கத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். திறமையுள்ள ஆண் தவளையின் ‘ஜீன்’ மட்டுமே இங்கே பரப்பப்படும். அத்ற்கு தான் இத்தனை சோதனைகள், எங்கள் இனம் தொன்று தொட்டு வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். சிறப்பாக வளர வேண்டும். திறமையுள்ள சகல கலா ‘ஜீண்’கள் மட்டுமே இங்கு பரப்ப படவேண்டும், ஆதலால், எங்கள் இனத்தை விருத்தியாக்கும் உரிமை பெண்களிடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களை மாதிரி பெண்ணடிமைத்தனத்தை நாங்களும் ஆதரித்திருந்தால் என் இனம் அழிந்து விடும் முட்டாள் மானிடா... ஒரு பூவிடம் இருக்கும் தேன் போன்றது தான் செக்ஸ். பூவில் இருக்கும் தேன் ருசியாக இல்லையென்றால் எந்த வண்டும் தேனீயும் அதன் அருகில் கூட போகாது. அதன் சந்ததி அழிந்து போய்விடும் அதே தான் அனைத்து உயிருக்கும் உள்ள சூட்ச்சமம், செக்ஸ் என்பது ஒரு இயற்கை பொறி, இவ்வுயிர் தன்னை அழிந்து கொள்ளாமல் பாதுகாக்க விரும்பி, உக்காந்து யோசிச்சு உருவாக்குன விஷயம் தான் செக்ஸ் எனப்படுவது.... "

மூச்சிறைக்க பேசி விட்டு குட்டைக்குள் குதித்து மறைந்து விட்டது அந்த தவளை... ஒரு சில நிமிட் இடைவேளிக்கு பிறகு மேலே வந்த அத்தவளை, மீண்டும் ஒரு முறை உரக்க கத்தியது

‘சகல கலா ஜீன்ஸ்’ (The Ultimate Genes) என்பது தான் செக்ஸின் நோக்கம்.

(தொடரும் )

2 comments:

  1. அருமையான கண்ணோட்டம்! பாராட்டுக்கள்!

    ReplyDelete